திருவண்ணாமலை மாவட்டத்தில், 18 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி - வீடியோ பதிவு செய்யப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடந்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடந்தது. இதில் திருவண்ணாமலை, அனக்காவூர், செய்யாறு, கீழ்பென்னாத்தூர், பெரணமல்லூர், தண்டராம்பட்டு, தெள்ளார், துரிஞ்சாபுரம், வெம்பாக்கம் ஆகிய 9 ஒன்றியங்களுக்கு கடந்த 27-ந் தேதியும், ஆரணி, மேற்கு ஆரணி, கலசபாக்கம், போளூர், செங்கம், சேத்துப்பட்டு, வந்தவாசி, ஜவ்வாதுமலை, புதுப்பாளையம் ஆகிய 9 ஒன்றியங்களுக்கு கடந்த 30-ந் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 47 கிராம ஊராட்சி தலைவர்கள், 1,544 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,594 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 5,848 பதவிகளுக்கான இடங்களுக்கு 16 ஆயிரத்து 593 பேர் போட்டியிட்டனர். இந்த 2 கட்ட தேர்தலிலும் சேர்த்து 83 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து உள்ளதாக மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியிலும், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியிலும், போளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு போளூர் பேரூராட்சி டான்பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியிலும், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு போளூர் பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடந்தது.
அதேபோல் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள டோமினிக் சேவியர் மேல்நிலைப் பள்ளியிலும், செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு செங்கம் பேரூராட்சியில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதுப்பாளையம் பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியிலும், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு ஜமுனாமரத்தூர் வனத்துறை மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது.
செய்யாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு செய்யாறு நகராட்சியில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு செய்யாறு நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு வந்தவாசி நகராட்சியில் உள்ள செக்ரேட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்திற்கு வந்தவாசி நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பெரணமல்லூர் பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்கு ஆரணி நகராட்சி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்கு எண்ணும் பணி நடந்தது.
வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் கதிர்சங்கர், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் காலை சுமார் 8.30 மணியளவில் ½ மணி நேரம் காலதாமதமாக இருப்பு அறையின் ‘சீல்’ பிரிக்கப்பட்டது. இருப்பறையில் உள்ள வாக்கு பெட்டிகள் அனைத்தையும் முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பார்வையிட்டனர்.
பின்னர் வாக்குப்பெட்டிகள் பணியாளர்கள் மூலம் வாக்கு சீட்டு பிரிக்கும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. வாக்கு சீட்டு நிறம் வாரியாக வகைப்படுத்தப்பட்டு 50 சீட்டுகள் கொண்ட கட்டுகளாக கட்டப்பட்டது. பின்னர் அவை வாக்குச் சீட்டுகள் எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு வாக்குச் சீட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து செல்லும் வாக்கு, செல்லாத வாக்குகள் என தனித்தனியாக முகவர்களிடம் காண்பித்து எண்ணப்பட்டது. வாக்கு எண்ணும் பணி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.
வாக்கு எண்ணும் பணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் தேர்தல் பார்வையாளர் சுந்தரவல்லி ஆகியோர் நேரில்பார்வையிட்டனர். வாக்கு எண்ணும் பணிகள் வீடியோ பதிவுகள் செய்யப்பட்டது. மேலும் வாக்கு சீட்டு பிரிக்கும் அறைகள் மற்றும் வாக்கு சீட்டு எண்ணும் அறைகள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
முன்னதாக வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டனர். வாக்கு எண்ணும் பணியின் போது வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்கு மையத்தில் குவிந்து திரண்டு காணப்பட்டனர். தொடர்ந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்கள், ஊராட்சி மன்ற வார்டு பதவிக்கு போட்டியிட்டவர்களுக்கும், வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றி பெற்றவர்களுக்கு உடனுக்குடன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story