திண்டுக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு


திண்டுக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 3 Jan 2020 4:00 AM IST (Updated: 3 Jan 2020 2:04 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், போலீசார் இடையே வாக்குவாதம்-தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 2 மாவட்ட கவுன்சிலர்கள், 19 ஒன்றிய கவுன்சிலர்கள், 14 ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு கடந்த 27-ந்தேதி தேர்தல் நடந்தது.

இதையடுத்து திண்டுக்கல் ஒன்றியத்துக்கான வாக்குச்சீட்டுகள், வாக்கு எண்ணும் மையமான எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் 130 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணும் மையத்தில் நுழைவு வாயில் முதல் அனைத்து பகுதிகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையே காலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்திற்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வந்தனர். ஆனால் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் உடனடியாக அனுமதிக்கப்படவில்லை. வாக்கு எண்ணும் பணி தொடங்கும் போதுதான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். மேலும் முகவர்கள் மற்றும் வேட்பாளர்களை நுழைவுவாயிலின் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். நேரம் செல்லசெல்ல வேட்பாளர்களும், முகவர்களும் குவிந்த வண்ணம் இருந்தனர். எனவே காலை 7 மணியளவில் தாடிக்கொம்பு சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் தங்களை உள்ளே அனுமதிக்கும் படி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும் போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் ஒலிபெருக்கியில் அறிவித்த பின்னர்தான் உள்ளே செல்ல அனுமதியளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். ஒரு வழியாக காலை 8 மணிக்கு வாக்குச்சீட்டுகள் பிரிப்பதற்காக முகவர்கள் மற்றும் வேட்பாளர்களை உள்ளே அனுமதித்தனர். அப்போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் தங்கள் செல்போன்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு வாக்கு எண்ணும் மையத்துக் குள் சென்றனர்.

Next Story