10 ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை: போலீசார், வேட்பாளர்களிடையே தள்ளுமுள்ளு


10 ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை: போலீசார், வேட்பாளர்களிடையே தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 3 Jan 2020 4:30 AM IST (Updated: 3 Jan 2020 3:04 AM IST)
t-max-icont-min-icon

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டன. இதையொட்டி போலீசார், வேட்பாளர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக நடந்தது. 23 மாவட்ட ஊராட்சி வார்டு குழு உறுப்பினர், 221 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 333 ஊராட்சி தலைவர், 3,009 ஊராட்சி உறுப்பினர் என 3586 உள்ளாட்சி பதவிகள் உள்ளன. இதில் போட்டியிட 12 ஆயிரத்து 377 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 173 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டும், 2 ஆயிரத்து 410 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 797 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து 2 ஆயிரத்து 789 பதவிகளுக்கு 8 ஆயிரத்து 997 பேர் போட்டியிட்டு இருந்தனர். இதில் முதல்கட்ட தேர்தலில் 81.43 சதவீதமும், 2-ம் கட்ட தேர்தலில் 80.76 சதவீதம் என மொத்தம் 80.82 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பெட்டிகள் அனைத்து அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டனர்.

முகவர்கள் திரண்டனர்

இந்த நிலையில் வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன. ஓசூர் ஒன்றியத்திற்கான ஓட்டுகள் அரசு கலைக்கல்லூரியிலும், காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கான ஓட்டுகள் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மத்தூர் ஒன்றியத்திற்கான ஓட்டுகள் மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், தளி ஒன்றியத்திற்கான வாக்குகள் தளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஊத்தங்கரை ஒன்றியத்திற்கான ஓட்டுகள் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்பட்டன. பர்கூர் ஒன்றியத்திற்கான வாக்குகள் அரசு பொறியியல் கல்லூரியிலும், கெலமங்கலம் ஒன்றியத்திற்கான ஓட்டுகள் கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், கிரு‌‌ஷ்ணகிரி ஒன்றியத்திற்கான வாக்குகள் கிரு‌‌ஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், சூளகிரி ஒன்றியத்திற்கான வாக்குகள் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கான வாக்குகள் வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் காலை 6 மணி அளவிலேயே வாக்கு எண்ணும் மையங்கள் முன்பு திரண்டிருந்தனர்.

தள்ளு-முள்ளு

இதில் காவேரிப்பட்டணம், பர்கூர் ஆகிய இடங்களில் வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டையை போலீசார் சரிபார்த்து உள்ளே அனுமதித்த போது போலீசார், வேட்பாளர்கள், முகவர்களிடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால் வேட்பாளர்களின் முகவர்கள் பலர், கதவை தள்ளிக் கொண்டு வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார்கள். சில முகவர்கள் செல்போன்களுடன் உள்ளே சென்றார்கள். அவர்களை பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி செல்போன்களை வாங்கிய பிறகு உள்ளே அனுப்பினார்கள். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என 4 விதமாக ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதற்காக 4 வாக்குச்சீட்டுகளையும் பிரித்து 50 வாக்கு சீட்டுகள் ஒரு பண்டல் என தயார் செய்து பிறகு எண்ணுவதற்காக வாக்குப்பெட்டிகள் அனுப்பப்பட்டன. காலை 11 மணி அளவில் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கியது.

மக்கள் கூட்டம்

முதலில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் முடிவுகள் தெரிய தொடங்கியது. முடிவுகள், அறிவிக்கப்பட்டதும், வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் சிறிது சிறிதாக கலைய தொடங்கினார்கள்.

இதே போல மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர்களின் முன்னணி விவரங்களும் தெரிய தொடங்கியது.

இரவு வரையில் தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் இருந்தன. இதனால் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்ற 10 இடங்களிலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது.

Next Story