காலை உணவு வழங்காததால் வாக்கு எண்ணும் அலுவலர்கள் போராட்டம் - ஓட்டு எண்ணிக்கை ஒரு மணி நேரம் தாமதம்


காலை உணவு வழங்காததால் வாக்கு எண்ணும் அலுவலர்கள் போராட்டம் - ஓட்டு எண்ணிக்கை ஒரு மணி நேரம் தாமதம்
x
தினத்தந்தி 3 Jan 2020 4:00 AM IST (Updated: 3 Jan 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே வாக்கு எண்ணும் மையத்திற்கு பணியாற்ற வந்த அலுவலர்களுக்கு காலை உணவு வழங்காததால் அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை ஒரு மணி நேரம் தாமதமானது.

அவினாசி, 

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணியளவில் பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.

இதற்காக தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் நேற்று காலை வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தனர். ஆனால் அவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை.

நீண்டநேரம் ஆகியும் காலை உணவு வழங்கப்படாததால் ஆவேசம் அடைந்த அலுவலர்கள் ஒன்று திரண்டு வாக்கு எண்ணும் மையத்தின் முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் தங்கள் கைகளில் பேப்பர் தட்டுகளுடன் கலந்துகொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் தேர்தல் நடத்தும் அதிகாரி அரிகரன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அலுவலர்களிடம் நீண்ட நேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்களுக்கு உடனடியாக காலை உணவு வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து அலுவலர்கள் தங்கள் போராட்டத்தை கை விட்டனர். இந்த சம்பவத்தால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணி ஒரு மணி நேரம் தாமதமானது.

இதுபோல் திருப்பூர் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணும் பணி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இங்கு 3-வது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் காங்கிர ஸ் வேட்பாளர் ராமசாமி போட்டியிட்டார். அவருடைய கட்சி வேட்பாளர் முகவர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்கு வெளியே இருந்து சாப்பாடு கொண்டுவர போலீசார் அனுமதி மறுத்ததால் போலீசாருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஜெய்வாபாய் பள்ளி நுழைவு வாயில் முன்பு நின்று போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். சம்பவம் பற்றி அறிந்ததும் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியம் வந்து காங்கிரஸ் கட்சி முகவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சாப்பாடு கொண்டு வர அனுமதி அளித்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி முகவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று மதிய உணவை சாப்பிட்டனர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story