தேர்தல் முடிவு வெளியிடுவதில் தாமதம்: தர்மபுரியில் எம்.பி., எம்.எல்.ஏ. தர்ணா போராட்டம்


தேர்தல் முடிவு வெளியிடுவதில் தாமதம்: தர்மபுரியில் எம்.பி., எம்.எல்.ஏ. தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2020 4:30 AM IST (Updated: 3 Jan 2020 3:46 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறி தர்மபுரியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. மற்றும் கட்சியினர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை நேற்று காலை ெதாடங்கியது. வாக்கு எண்ணிக்கை பணி இரவும் தொடர்ந்து நடந்து வருகிறது. தர்மபுரி ஒன்றியத்திற்குட்பட்ட 8-வது வார்டு, 18-வது வார்டு மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறும் நிலையில் இருந்த போது தேர்தல் முடிவுகளை மாற்றி அறிவித்ததாக கூறியும், தேர்தல் முடிவு வெளியிடுவதில் தாமதம் செய்வதாகவும் கூறி தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. செந்தில்குமார் எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

அங்கு அவர்கள் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் முடிவுகளை நேர்மையான முறையில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திகோஷங்கள் எழுப்பினர்.

சாலை மறியல்

தர்மபுரி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று நடைபெற்றது. 8-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தல் முடிவு வெளியிடுவது தொடர்பாக 2 கட்சிகளில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விைரந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை விரட்டினர். இதையடுத்து 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்காக முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.


Next Story