மத்திய அரசை கண்டித்து புதுவையில் 8-ந் தேதி முழு அடைப்பு - அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு


மத்திய அரசை கண்டித்து புதுவையில் 8-ந் தேதி முழு அடைப்பு - அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Jan 2020 11:19 PM GMT (Updated: 2 Jan 2020 11:19 PM GMT)

மத்திய அரசை கண்டித்து புதுவையில் 8-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

புதுச்சேரி, 

புதுவை ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சேது செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி டெல்லியில் தொழிலாளர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில், மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து ஜனவரி 8-ந் தேதி நாடு முழுவதும் பொது வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும், அரசு ஊழியர் சம்மேளனமும் இணைந்து பொது வேலைநிறுத்தத்தை முழு அடைப்பு போராட்டமாக நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்திற்கு பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ உரிமையாளர்கள், வணிகர்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும்.

அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம், குறைந்த பட்ச ஒய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட்டு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கு கட்டுப்படியான குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும்.

அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பை அதிகரிக்கும் தொழில்வளர்ச்சியை ஏற்படு்த்த வேண்டும். குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்,

மோட்டார் வாகன சட்ட திருத்தம் மற்றும் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்பது உள்பட 40 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் தினேஷ்பொன்னையா, ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் ஞானசேகரன் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story