நிச்சயிக்கப்பட்ட பெண் பேச மறுத்ததால் வக்கீல் தற்கொலை - தூக்கில் தொங்கியதை ‘வீடியோ காலில்’ பதிவிட்டார்


நிச்சயிக்கப்பட்ட பெண் பேச மறுத்ததால் வக்கீல் தற்கொலை - தூக்கில் தொங்கியதை ‘வீடியோ காலில்’ பதிவிட்டார்
x
தினத்தந்தி 3 Jan 2020 5:45 AM IST (Updated: 3 Jan 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென பேச மறுத்ததால் விரக்தி அடைந்த வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் தொங்கியதை வீடியோ காலில் அவர் பதிவிட்டார்.

காலாப்பட்டு, 

புதுவை கனகசெட்டிக் குளத்தை சேர்ந்தவர் கோதண்டம். விவசாயி. இவரது மகன் சுரேஷ் (வயது 31), வக்கீல். இவர் புதுவை சட்டக்கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த கடலூரை சேர்ந்த பெண்ணை காதலித்தார். அதை அந்த பெண்ணும் ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து காதல்ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று காதலை வளர்த்தது.

இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ள இருவரும் சம்மதம் பெற்றனர். இதையடுத்து அவர்களுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு வருகிற 27-ந் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அந்த பெண் திடீரென்று சுரேசுடன் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பேச முயன்ற அவரை அந்த பெண் தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சுரேஷ் சம்பவத்தன்று இரவு அந்த பெண்ணிடம் செல்போன் மூலம் வீடியோ காலில் பேசினார்.

அப்போது நீ என்னுடன் பேச மறுத்ததால் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று தெரிவித்து நாற்காலியில் நின்றபடி மின்விசிறியில் தூக்கு மாட்டினார். அதன்பிறகு போன் துண்டிக்கப்பட்டது.

ஏதோ விளையாட்டுக்குத்தான் சுரேஷ் இப்படி செய்கிறார் என்று அந்த பெண் கருதினார். இருப்பினும் பதற்றம் அடைந்த அவர் அந்த பகுதியை சேர்ந்த தனது நண்பர் சிவசக்தி என்பவரிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தார். உடனே அவர் சுரேஷ் வீட்டுக்கு சென்று, அவருடைய குடும்பத்தினரிடம் கூறினார். அங்கு சுரேசின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டிப்பார்த்தும், திறக்கப்படாததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது சுரேஷ் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே கடலூரில் இருந்து அந்த பெண்ணும் புதுவைக்கு வந்தார். அவரிடம் சுரேசின் சாவு குறித்து காலாப்பட்டு போலீசார் விசாரித்தனர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் பேச மறுத்ததால் சுரேஷ் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story