ஆட்சியாளர்களுக்கு மக்கள் தான் எஜமானர்கள் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு


ஆட்சியாளர்களுக்கு மக்கள் தான் எஜமானர்கள் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 3 Jan 2020 12:18 AM GMT (Updated: 3 Jan 2020 12:18 AM GMT)

ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மக்கள் தான் எஜமானர்கள் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி மாநிலம் சட்டம்-ஒழுங்கு, நீதி மற்றும் உறுதியான நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் 94 புள்ளிகள் பெற்று நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தனியார் ஓட்டலில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

விழாவில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி., துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, சிவா, வெங்கடேசன், கீதா ஆனந்தன் மற்றும் அரசு தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் உள்பட அரசு செயலர்கள், துறை தலைவர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

சட்டம்-ஒழுங்கு, நீதி மற்றும் உறுதியான நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் புதுவை மாநிலம் அதிக புள்ளிகள் பெற்று நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது. எரிசக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல சக்தி பிரிவில் 97 புள்ளிகள் பெற்று நாட்டிலேயே முதலிடத்தையும், சுகாதாரத்துறையில் 71 புள்ளிகள் பெற்று யூனியன் பிரதேசங்களுக்கு இடையில் முதலிடத்தையும், தரமான கல்வி பிரிவில் 67 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும் பெற்றுள்ளோம்.

இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புதுச்சேரிக்கு முதல் முறையாக இந்த பெருமை கிடைத்துள்ளது.

இது அனைவருக்கும் கிடைத்த வெற்றி. ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மக்கள் தான் எஜமானர்கள். இதனை மனதில் கொண்டு நலத்திட்டங்களை செயல்படுத்த விருப்பு வெறுப்பின்றி ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். அரசின் கொள்கையை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முழு முனைப்புடன் செயல்பட வேண்டும். அடுத்த முறை இன்னும் அதிக விருதுகள் பெறுவதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story