அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பா.ம.க. மறியல்


அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பா.ம.க. மறியல்
x
தினத்தந்தி 4 Jan 2020 4:30 AM IST (Updated: 4 Jan 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 18-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் சரவணன் போட்டியிட்டார். கூட்டணி கட்சியான பா.ம.க.வும் இங்கு போட்டியிட்டது.

பா.ம.க. சார்பில் மணிமாறன் அங்கு போட்டியிட்டார். முடிவில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சரவணன் 1,455 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க.வை சேர்ந்த மணிமாறன் 1,283 ஓட்டுகள் பெற்றார்.

மறியல் போராட்டம்

பா.ம.க. வேட்பாளர் வெற்றி பெற்றதை முறைகேடாக மாற்றி அ.தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவித்து இருப்பதாக கூறி பா.ம.க. வேட்பாளர் மணிமாறனும், அவரது ஆதரவாளர்களும் குற்றம் சாட்டி கன்னிகைபேர் அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரே வாக்கு எண்ணும் மையம் அருகே சென்னை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.

கூட்டணி கட்சி வெற்றியை எதிர்த்து பா.ம.க. மறியல் செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story