திருக்கோவிலூரில், வங்கி ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு - அலாரம் ஒலித்ததால் கொள்ளையன் தப்பி ஓட்டம்


திருக்கோவிலூரில், வங்கி ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு - அலாரம் ஒலித்ததால் கொள்ளையன் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2020 4:00 AM IST (Updated: 4 Jan 2020 1:36 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் வங்கியின் ஏ.டி.எம்.எந்திரத்தை கொள்ளையன் உடைத்த போது அலாரம் ஒலித்ததால் கொள்ளையன் தப்பி ஓடினான்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர்-கள்ளக்குறிச்சி மெயின்ரோட்டில் கீழத்தாழனூர் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் ஏ.டி.எம். எந்திரமும் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காக வந்த கொள்ளையன், ஏ.டி.எம். மையம் பூட்டப்பட்டு இருந்ததால், அருகே உள்ள காளி கோவிலில் இருந்த சூலாயுதத்தை திருடிக்கொண்டு வந்து ஏ.டி.எம். மையத்தின் ‌‌ஷட்டர் கதவு பூட்டை உடைத்து திறந்து உள்ளே சென்று ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தான்.

அப்போது அவனது நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகாமல் இருப்பதற்காக கண்காணிப்பு கேமராவை பேப்பரால் மூடினான். அப்போது அங்கு உள்ள அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையன், சூலாயுதத்தை வெளியே வீசி விட்டு வங்கியின் பின்புற சுவர் வழியாக ஏறி வெளியே குதித்து தப்பி ஓடி விட்டான்.

இந்த நிலையில் அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டு, பக்கத்தில் உள்ள டயர் பஞ்சர் கடை உரிமையாளர் மற்றும் எதிர்புறம் உள்ள பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை பாதுகாவலர்கள் ஓடி வந்து பார்த்தனர்.

அந்த சமயம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ரமே‌‌ஷ் மற்றும் போலீசாரும் வங்கிக்கு வந்து பார்த்தனர். இதில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்திருந்ததே தவிர, பணம் கொள்ளை போகவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

பின்னர் இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு திருக்கோவிலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு மகே‌‌ஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குணபாலன், உலகநாதன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இச்சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருக்கோவிலூர் நகரில் கடந்த ஒரு மாதமாக சங்கிலி தொடர்போல கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 25 நாட்களுக்கு முன்பு வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல்களில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஆனால் கொள்ளையர்கள் யார்? என்று இதுவரை போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை.

அடுத்ததாக திருக்கோவிலூர் மேலத்தாழனூரில் ஒரு வீட்டில் கொள்ளை நடந்தது. அன்றையதினமே திருக்கோவிலூர்-திருச்சி மெயின்ரோட்டில் செட்டித்தாங்கலில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது.

இதேபோல் திருக்கோவிலூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்திலும் கொள்ளை முயற்சி நடந்தது. இவை அனைத்துக்கும் முத்தாய்ப்பாக கடந்த 31-ந் தேதி இரவு திருக்கோவிலூர் புறவழிச்சாலை அருகில் உள்ள போலீஸ் ஏட்டு சிவசுப்பிரமணியன் வீட்டில் கொள்ளை நடந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வங்கி ஏ.டி.எம்.மையத்தில் கொள்ளை முயற்சி நடந்து உள்ளது.

ஆனால் இக்கொள்ளை சம்பவங்களில் இதுவரை போலீசாரால் துப்புதுலக்க முடியவில்லை. இதனால் கொள்ளையர்கள் தொடர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story