பேரணாம்பட்டு அருகே, மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; 2 பெண்கள் சாவு - வாலிபர் படுகாயம்


பேரணாம்பட்டு அருகே, மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; 2 பெண்கள் சாவு - வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Jan 2020 3:30 AM IST (Updated: 4 Jan 2020 1:59 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டை அடுத்த டி.டி.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர், டி.டி.மோட்டூர் அருகே உள்ள எர்த்தாங்கல் கிராமத்தில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டிக்கொண்டு புறப்பட இருந்தார். இதனால் அதே கிராமத்தை சேர்ந்த முருகேசனின் உறவினர் வினோத் (வயது 30) என்பவர் முருகேசனின் மகள் சந்தியா (18) மற்றும் தனது மைத்துனி ஆம்பூர் தாலுகா பள்ளிக்குப்பம் அருகே உள்ள பூமலைப்புரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தி (19) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு நேற்று டி.டி.மோட்டூர் கிராமத்தில் இருந்து எர்த்தாங்கல் கிராமத்தை நோக்கி சென்றார்.

பேரணாம்பட்டு-குடியாத்தம் சாலையில் ஊசூரான்பட்டி கிராமம் அருகில் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவை வினோத் முந்திச்செல்ல முயன்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வினோத், ஆனந்தி, சந்தியா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆனந்தி, சந்தியா ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வினோத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story