வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் - கலெக்டர் ‌ஷில்பா தகவல்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் - கலெக்டர் ‌ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 3 Jan 2020 10:45 PM GMT (Updated: 3 Jan 2020 8:35 PM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் ‌ஷில்பா கூறிஉள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் 1.1.2020 தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறையில் திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 23-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியல் உதவி கலெக்டர், தாலுகா, பஞ்சாயத்து அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. அதை வாக்காளர்கள் பார்வையிட்டு தங்களது பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 23-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக படிவம்-6 வழங்க வேண்டும்.

இறந்தவர்கள் பெயரை நீக்க படிவம்-7, பெயர், பாலினம், உறவுமுறை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை திருத்தம் செய்ய படிவம்-8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்காக சிறப்பு முகாம்கள் இன்று (சனிக்கிழமை), நாளை மற்றும் 11-ந்தேதி, 12-ந்தேதி ஆகிய 4 நாட்கள் நடக்கிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள 10 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 2,979 வாக்குச்சாவடிகளிலும் முகாம் நடைபெறுகிறது. தகுதி உள்ள அனைவரும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குச்சாவடி மைய அலுவலரிடம் நேரில் மனு அளிக்கலாம்.

மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான WWW.NVSP.IN (National Voters service Portal) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story