பொதுமக்களுக்கு தகவல் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தினால் அதிகாரிகளுக்கு அபராதம் - ஆணையர் பிரதாப்குமார் எச்சரிக்கை
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தகவல் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தினால் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் எச்சரிக்கை விடுத்தார்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தகவல் அறியும் உரிமை சட்ட மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஆணையர் பிரதாப்குமார் பேசியதாவது:-
தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து அதிகாரிகள் யாரும் பயப்பட வேண்டாம். மக்கள் இந்த சட்டம் குறித்து விழிப்போடு உள்ளனர். அதை விட அதிகாரிகள் சட்டம் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். எந்த தகவலாக இருந்தாலும் பொதுமக்கள் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். நம்மிடம் இருக்கும் தகவல்களை பொதுமக்களுக்கு தர மறுக்கக்கூடாது. பயங்கரவாதம் உள்ளிட்ட குறிப்பிட்ட விவரங்களை மட்டுமே மறுக்க வேண்டும். மற்ற தகவல்களை எப்படியாவது ஆவணங்களில் தேடி கண்டுபிடித்து வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக தற்போது வரை 18 ஆயிரம் மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை அனைத்தையும் இந்த ஆண்டுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பொது தகவல் அலுவலரும் நிலுவையில் உள்ள மனுக்களை மறுஆய்வு செய்து பதில் அளித்து முடித்து வைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தகவல் அளிக்க மறுத்த அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். தமிழகத்திலும் ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தகவல் கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்து வரும் வழக்குகளில் அதிகாரிகளுக்கு இனிமேல் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும்.
எனவே தகவல் அளிக்கும் அலுவலர், வாரம் ஒருமுறை தன்னிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்தால் எளிதாக பதில் அளித்து விடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story