பாகல்கோட்டை அருகே பரிதாபம்: கார்-அரசு பஸ் மோதல் - 4 பேர் உடல் நசுங்கி சாவு


பாகல்கோட்டை அருகே பரிதாபம்: கார்-அரசு பஸ் மோதல் - 4 பேர் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 4 Jan 2020 3:15 AM IST (Updated: 4 Jan 2020 3:15 AM IST)
t-max-icont-min-icon

பாகல்கோட்டை அருகே காரும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

பெங்களூரு,

பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகா சிரோலி கிராமத்தில் நேற்று அதிகாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் கர்நாடக அரசு பஸ் (கே.எஸ்.ஆர்.டி.சி) வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், காரும், அரசு பஸ்சும் திடீரென்று நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பஸ் மோதியதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் காரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் முதோல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். பின்னர் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா ஹாஜிபீலகி அருகே கோடே கிராமத்தை சேர்ந்த சித்தராயா தேலே (வயது 36), பாலப்பா சென்டகி (34), அனுமந்தா கனகாரா (21), ரியாஜ் ஜாலகேரி (25) என்று தெரிந்தது. இவர்கள் 4 பேரும் ஜமகண்டியில் இருந்து தார்வார் மாவட்டத்திற்கு காரில் சென்றதும், அப்போது பெலகாவியில் இருந்து கலபுரகிக்கு வந்த கர்நாடக அரசு பஸ் கார் மீது மோதியதில் 4 பேரும் பலியானதும் தெரியவந்துள்ளது.

மேலும் முன்னால் சென்ற டிராக்டரை அரசு பஸ் டிரைவர் முந்தி செல்ல முயன்றதும், அந்த சந்தர்ப்பத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த கார் மீது மோதியதும் தெரியவந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினர்.

இதுகுறித்து முதோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story