எடியூரப்பாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த கர்நாடகத்தை புறக்கணிக்கிறார் - பிரதமர் மோடி மீது சித்தராமையா தாக்கு


எடியூரப்பாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த கர்நாடகத்தை புறக்கணிக்கிறார் - பிரதமர் மோடி மீது சித்தராமையா தாக்கு
x
தினத்தந்தி 4 Jan 2020 4:00 AM IST (Updated: 4 Jan 2020 3:30 AM IST)
t-max-icont-min-icon

எடியூரப்பாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த கர்நாடகத்தை பிரதமர் மோடி புறக்கணிக்கிறார் என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் கனமழை பெய்து, வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 103 தாலுகாக்கள் பாதிக்கப்பட்டன. இதை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு நாங்கள் வலியுறுத்தினோம். வெள்ளத்தால் ரூ.38 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.1,200 கோடி மட்டுமே வழங்கியது. அதன் பிறகு இதுவரை கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.

துமகூருவில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் முதல்-மந்திரி எடியூரப்பா இதுபற்றி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் பிரதமரிடம் இதுகுறித்து நேரிலும் எடுத்து கூறினார். நிவாரண உதவியை வழங்குவதாக பிரதமர் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. குறைந்தபட்சம் இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறியிருக்க வேண்டும். அதை கூட பிரதமர் கூறவில்லை.

அதன் பிறகு கவர்னர் மாளிகையில் பிரதமரை சந்தித்து இதுபற்றி பேச எடியூரப்பா முயற்சி செய்துள்ளார். அதற்கும் மோடி வாய்ப்பு வழங்கவில்லை. இதன் மூலம் எடியூரப்பா அவமானப்படுத்தப்பட்டு உள்ளார். இது மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம். கர்நாடகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது.

பா.ஜனதாவை சேர்ந்த 25 எம்.பி.க்களை வெற்றி பெற வைத்த கர்நாடக மக்களுக்கு தொடர்ந்து அவமானம் இழைக்கப்படுகிறது. சரக்கு-சேவை வரி வசூலில் சரியான பங்கை கர்நாடகத்திற்கு மத்திய அரசு வழங்கவில்லை. மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்ப்பதில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை.

மத்திய அரசு திட்டமிட்டு கர்நாடகத்தை புறக்கணித்து வருகிறது. எடியூரப்பாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கர்நாடகத்தை பிரதமர் ேமாடி புறக்கணிக்கிறார். எடியூரப்பாவை பதவியை விட்டு நீக்க பா.ஜனதாவில் ஒரு கோஷ்டி முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் பிரதமர் மோடி நடந்து கொள்கிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் பல முறை போராட்டம் நடத்தியது. ஆனால் தடிமனான சருமத்தை கொண்ட கர்நாடக அரசு, இதை கவனத்தில் கொள்ளவில்லை. இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story