பெங்களூருவில் 107-வது இந்திய அறிவியல் மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


பெங்களூருவில் 107-வது இந்திய அறிவியல் மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Jan 2020 12:00 AM GMT (Updated: 3 Jan 2020 10:27 PM GMT)

பெங்களூருவில் நேற்று இந்திய அறிவியல் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க விஞ்ஞானிகள் மாற்று பொருளை கண்டுபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு,

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார். துமகூருவில் சித்தகங்கா மடத்திற்கு சென்ற அவர், பிறகு அதே நகரில் நடைபெற்ற கிருஷி கர்மான் விருது வழங்கும் விழா மற்றும் கிருஷி சம்மான் திட்டத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அதே நாளில் மாலையில் பெங்களூருவில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு வந்து விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு கவர்னர் மாளிகையில் தங்கினார். இந்த நிலையில் 107-வது இந்திய அறிவியல் மாநாடு தொடக்க விழா பெங்களூரு விவசாய பல்கலைக்கழகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நமது நாட்டின் மொத்த பலமே அறிவியல் வளர்ச்சியில் தான் அடங்கியுள்ளது. அறிவியல் வளர்ச்சியில் இந்தியா உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது. இதற்கு நமது விஞ்ஞானிகள் தான் காரணம். சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை காண நான் பெங்களூரு வந்திருந்தேன். இந்த திட்டத்தால் உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்குகின்றன. இதற்கு விஞ்ஞானிகளின் உழைப்பு தான் காரணம் என்பதை நாம் மறக்க முடியாது. நாட்டின் வளர்ச்சியில் உங்களின் பங்கு மிக முக்கியமானது.

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் வெற்றிகரமாக போய் சேர்கிறது என்றால், அதில் அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சியின் பங்கு மிகப்பெரியது. குடிநீர், நல்ல சாலைகள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிைடப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமாக உள்ளது. ஜி.ஐ.எஸ். தொழில்நுட்பத்தால் குறித்த காலத்தில் அந்த பணிகள் முடிக்கப்படுகின்றன. அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க மத்திய அரசு ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் கூட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நமது நாடு இன்று எல்லா துறையின் வளர்ச்சியிலும் முன்னிலையில் உள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி, விவசாயம் என்று ஒவ்வொரு துறையிலும் இந்தியா பீடுநடை போடுகிறது.

மனித குலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை அறவே ஒழிக்க வேண்டும். இதற்கு மாற்றாக விஞ்ஞானிகள், புதிய பொருட்களை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு புதிய ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். இவற்றுக்கு மாற்றாக, கிராமப்புற கைவினைஞர்கள், சிறு, குறு தொழில்துறையினர் குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய அளவில் விஞ்ஞானிகள் புதிய பொருளை கண்டுபிடிக்க வேண்டும்.

அதே போல் மின்சாதன பொருட்களின் கழிவுகளில் இருந்து உலோகங்களை பிரித்தெடுக்க வேண்டும். அத்தகைய கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம். பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும். தண்ணீரை சேமித்து அவற்றை பாதுகாப்பது நமது முக்கிய பணிகளில் ஒன்றாகும்.

சிறுதொழில்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. குடிசை தொழில்களை மேம்படுத்துவது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது ஆகியவை மத்திய அரசின் முக்கியமான நோக்கங்கள் ஆகும். இந்த நோக்கங்களை நிறைவேற்ற இளம் விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். ஆழ்கடலில் இருக்கும் பொருட்கள் குறித்து அறிய ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். 2025-ம் ஆண்டுக்குள் நாட்டின் எந்த மூலையிலும் காசநோய் இருக்கக்கூடாது. மக்களை தொற்று நோயில் இருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம்.

குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. புதுமையை கண்டுபிடித்தல், காப்புரிமை பெறுதல், உற்பத்தி செய்தல், முன்னேறுதல் ஆகிய 4 அம்சங்கள் இளம் விஞ்ஞானிகளின் குறிக்கோளாக இருக்க வேண்டும். புதுைமயை கண்டுபிடித்தல் மக்களுக்காக, மக்களால் என்ற முறையில் இருக்க வேண்டும். இது நாட்டின் வேகமான வளர்ச்சியை ஏற்படுத்த உதவியாக இருக்கும். அரசுக்கும், சாமானிய மக்களுக்கும் இடையே தொழில்நுட்பம் ஒரு பாலமாக உள்ளது.

பெங்களூரு கலாசார ரீதியாக பூங்கா நகரமாக உள்ளது. அது தற்போது புதிய தொழில்களை தொடங்க ஏதுவான நகரமாக மாறியுள்ளது. அதற்கு இங்கு நிலவும் சிறப்பான அறிவியல் மற்றும் புதுமையை புகுத்துதலின் சுற்றுச்சூழலே முக்கிய காரணம். விஞ்ஞானிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் பங்களிப்பது மட்டுமின்றி, சமூக பிரச்சினைகளை தீர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். குடிநீர் பிரச்சினை முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது வரை இவற்றுக்கு தீர்வு காணுவதை ஒரு சவாலாக ஏற்று செயலாற்ற வேண்டும். சரியான கொள்கை, ஆராய்ச்சி, மனிதவளங்கள் மூலம் தடுப்பூசி போன்ற உயிரி பொருட்கள் உற்பத்தி செய்வதற்காக இந்தியா 100 மில்லியன் டாலர் பொருளாதார குவிமையமாக மாற வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆட்சி நிர்வாகத்தை சிறப்பான முறையில் நடத்த முடிகிறது. தூய்மை பாரதம், ஆயுஸ்மான் போன்ற திட்டங்களால் உலகின் கவனத்தை இந்தியா ஈர்த்துள்ளது. துமகூருவில் நேற்று (நேற்று முன்தினம்) ஒரு பொத்தானை அழுத்தியவுடன் ஒரே நேரத்தில் 6 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டது.

ஆன்லைன் சந்தை நடைமுறையில் உள்ளதால் இடைத்தரகர்களின் தலையீடு பெருமளவில் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். 2022-ம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் பொருட்டு உயிரி எரிபொருள், எத்தனால் உள்ளிட்டவற்றின் உற்பத்தியை பெருக்க வேண்டியது அவசியம். விவசாயம், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் புரட்சி செய்ய வேண்டும். இதன் மூலம் புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தை நாம் அடைய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

காலை 10.50 மணிக்கு பேச்சை தொடங்கிய பிரதமர், காலை 11.15 மணிக்கு நிறைவு செய்தார். அவர் 25 நிமிடங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மாறி மாறி உரையாற்றினார். இந்த விழாவில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய அறிவியல்துறை மந்திரி ஹர்ஷவர்தன், இந்திய அறிவியல் மாநாட்டு பொது தலைவர் கே.எஸ்.ரங்கப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி, எலகங்கா விமானப்படை தளத்திற்கு வந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். பிரதமர் வருகையை முன்னிட்டு, மாநாடு நடந்த இடத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Next Story