அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது கர்ப்பிணி திடீர் சாவு


அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது கர்ப்பிணி திடீர் சாவு
x
தினத்தந்தி 3 Jan 2020 10:49 PM GMT (Updated: 3 Jan 2020 10:49 PM GMT)

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது கர்ப்பிணி திடீரென்று உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் இறந்ததாக அவரது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மூலக்குளம், 

புதுவை ரெட்டியார்பாளையம் அஜிஸ்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் பவித்ரா (வயது 27) என்பவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கர்ப்பமடைந்த பவித்ரா, எல்லைபிள்ளை சாவடியில் உள்ள அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு வருகிற 7-ந் தேதி பிரசவம் நடைபெறலாம் என டாக்டர்களால் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் பவித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவித்ராவிற்கு பெண் குழந்தை பிறந்ததாக டாக்டர்கள் அறிவித்த நிலையில் நேற்று முன்தினம் காலை பிரகாசும், அவரது மாமியாரும் குழந்தையை பார்க்க சென்றனர். ஆனால் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் குழந்தையை காண்பிக்கவில்லை.

மேலும் பவித்ராவுக்கு அதிகமான ரத்தப்போக்கு உள்ளதாக கூறி அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பின்னர் பவித்ராவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனர். இதன் பின்னர் சிகிச்சை பலனின்றி பவித்ரா இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதனால் ஆத்திரமடைந்த பவித்ராவின் உறவினர்கள் மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து, இதுபற்றி புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அதன்பேரில் பிரகாஷ், ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தனது மனைவி இறந்துவிட்டதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.. இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story