முறைகேடு புகார் எதிரொலி: அரசு பல் மருத்துவக்கல்லூரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை
முறைகேடு புகார் தொடர்பாக புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
புதுச்சேரி,
புதுவை கோரிமேட்டில் மகாத்மாகாந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இங்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சி.பி.ஐ.க்கு புகார்கள் சென்றன. இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல் மருத்துவக் கல்லூரிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பெங்களூருவில் பணியாற்றியதாக போலி சான்றிதழ் கொடுத்து பேராசிரியர் ஒருவர் பணியில் சேர்ந்தது, மாணவர்கள் சேர்க்கை, மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு ஆகிய புகார்கள் குறித்து விசாரிக்கப்பட்டது.
கடந்த (டிசம்பர்) மாதம் 19-ந் தேதி மீண்டும் புதுவை அரசு பல் மருத்துவக்கல்லூரிக்கு வந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சென்னையில் இருந்து சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் பாமா தலைமையில் 4 பேர் நேற்று காலை புதுவை அரசு பல் மருத்துவக்கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் நேராக பல் மருத்துவக் கல்லூரி பதிவாளர் அறைக்கு சென்றனர். அங்கு அறையை மூடிக்கொண்டு அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் பதிவாளர், துணை பதிவாளர் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது.
சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை பல் மருத்துவக்கல்லூரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story