மும்பையில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு


மும்பையில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 Jan 2020 11:43 PM GMT (Updated: 3 Jan 2020 11:43 PM GMT)

மும்பையில் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 உயர்ந்தது. பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்தை நெருங்கியது.

மும்பை,

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தடாலடியாக உயர்ந்து வருகிறது. அண்மையில் மும்பையில் ரூ.30 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி கொடுத்த தங்கம் அதன்பின்னர் விலை குறைந்து இருந்தாலும், தொடர்ந்து விலை உச்சத்தை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறது. மும்பையில் நேற்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 820-க்கும், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 560-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் அதிகரித்தது.

இதன்படி நேற்று ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 870-க்கும், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 735-க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 815-க்கும், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தில் இருந்தது. தற்போது மீண்டும் ரூ.30 ஆயிரத்தை தாண்டி, புதிய வரலாற்றை படைத்து விட்டது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதாலும், தொடர்ந்து உலக பொருளாதாரம் மந்த நிலை நீடிப்பதால், உலக முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயருகிறது. இனிவரக்கூடிய நாட்களிலும் இதேநிலைதான் நீடிக்கும் என நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story