அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி: விவசாயிகள் மீண்டும் உண்ணாவிரதம்


அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி: விவசாயிகள் மீண்டும் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 4 Jan 2020 11:00 PM GMT (Updated: 4 Jan 2020 4:24 PM GMT)

அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வியின் காரணமாக திருச்சியில் விவசாயிகள் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினர். அவர்கள் நாமமிட்டு, ரத்த கண்ணீர் வடிப்பது போல அமர்ந்திருந்தனர்.

திருச்சி,

வறட்சியின் காரணமாக தற்கொலை செய்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை இறக்குமதி செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 2-ந் தேதி முதல் 7 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 2-ந்தேதி பட்டை, நாமமிட்டு, கோவணத்துடன் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

அவர்களிடம் உதவி கலெக்டர் அன்பழகன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். அதன்பின் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முதல்-அமைச்சரை சந்திக்க அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்றும் அய்யாக்கண்ணு தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர் சிவராசு தலைமையில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ரத்த கண்ணீர்

இந்த நிலையில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று காலை திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ அருகே மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில் விவசாயிகள் ரத்த கண்ணீர் வடிப்பது போல சிவப்பு நிறத்தில் முகத்தில் வரைந்திருந்தனர். மேலும் நாமமிட்டிருந்தனர். போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது:-

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. முதல்-அமைச்சரையும் சந்திக்க அனுமதி பெற்று தரவில்லை. விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் எங்களது ஆடையை உருவிவிட்டார்கள். தற்போது ரத்த கண்ணீர் வடிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம். அதனை உணர்த்தும் வகையில் தான் இந்த உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது.

போராட்டம் தொடரும்

கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும். தினமும் நூதன முறையில் போராட்டம் நடைபெறும். நாளை (அதாவது இன்று) மண்டை ஓடுகளுடன், தூக்கு கயிறு மாட்டிக்கொள்வதுபோல் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் உள்பட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விவசாயிகள் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர்.


Next Story