மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மறுத்ததால் வேட்பாளர் மகன் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி


மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மறுத்ததால் வேட்பாளர் மகன் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 4 Jan 2020 11:15 PM GMT (Updated: 4 Jan 2020 5:37 PM GMT)

மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மறுப்பு தெரிவித்ததால் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளரின் மகன் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், கீழப்புலியூர் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது, செல்வராஜ் 198 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அங்கு போட்டியிட்ட வெள்ளைச்சாமி என்பவர் 2 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதனால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் அலுவலரிடம் வெள்ளைச்சாமி ஆதரவாளர்கள் கடந்த 2-ந் தேதி இரவு மனு கொடுத்தனர். அப்போது, அங்கிருந்தவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மறுநாள் வருமாறு கூறி அனுப்பி வைத்தனர். அதன்படி நேற்று முன்தினம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வெள்ளைச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றனர். அப்போது, மறு வாக்கு எண்ணிக்கையின் போது செல்வராஜ் தரப்பினரும் வரவேண்டும் என்று தேர்தல் நடத்திய அலுவலர் வெங்கடேஷ்வரன் கூறியதாக தெரிகிறது.

தீக்குளிக்க முயற்சி

இந்தநிலையில் நேற்று மதியம் வெள்ளைச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு தேர்தல் நடத்திய அலுவலர் வெங்கடேஷ்வரன், செல்வராஜ் தரப்பினர் யாரும் வரவில்லை என்றும், வாக்கு முடிவுகள் தெரிவிக்கப்பட்டு 24 மணி நேரம் ஆகிவிட்டதால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பு இல்லை என்றும் கூறினாராம்.

அதுமட்டுமல்லாமல் செல்வராஜுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர் வெள்ளைச்சாமியின் மகன் பிரவீன் (வயது 25) மற்றும் ஆதரவாளர்கள் சுரேஷ்(30), பிரகாஷ் (31) ஆகியோர் கையில் குடிநீர் பாட்டிலில் வைத்து இருந்த மண்எண்ணெயை திடீரென்று, அவர்களது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பரபரப்பு

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த குன்னம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் மனு எழுதி கொடுங்கள் என்றனர். பின்னர் அவர்கள் மனு எழுதி கொடுத்து கலைந்்து சென்றனர். வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story