தமிழ் தேசிய கட்சி சார்பில் தஞ்சையில், வடமாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டு


தமிழ் தேசிய கட்சி சார்பில் தஞ்சையில், வடமாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டு
x
தினத்தந்தி 4 Jan 2020 11:00 PM GMT (Updated: 4 Jan 2020 6:34 PM GMT)

தமிழ் தேசிய கட்சியினர் தஞ்சையில், வடமாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டு போட்டனர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வணிகர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர், பழைய பஸ் நிலையம் பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் கடைகள் உள்ளன. கிரானைட்ஸ் மற்றும் இனிப்பகம், பிளாஸ்டிக் பொருட்கள், எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன.

வடமாநிலத்தவர்களால் தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. எனவே அவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி தமிழ் தேசிய கட்சியினர், கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

கடைகளுக்கு பூட்டு போட்டனர்

அதன்படி நேற்று ஆர்.ஆர்.நகரில் உள்ள வடமாநிலத்தை சேர்ந்த 4 கடைகளுக்கு தமிழ் தேசிய கட்சியினர் பூட்டு போட்டனர். மேலும் அதன் அருகே துண்டு பிரசுரங்களையும் வைத்திருந்தனர்.

அதில், தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வடமாநிலத்தவர்கள் உடனே வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம். இங்கு கடைகளை திறக்கக்கூடாது போன்ற வாசகங்கள் இருந்தன..

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்த நிலையில் நேற்று கடையை திறக்க வந்த கடைக்காரர்கள் கடையில் வேறு பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் மாநில துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் வாசுதேவன், நகர பொருளாளர் கந்தமுருகன் மற்று வணிகர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.

பின்னர் அவர்கள் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த வணிகர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், கடைகளுக்கு பூட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுக்களையும் அளித்தனர்.

இந்த போராட்டத்தால் தஞ்சையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


Next Story