தேர்தலில் தோற்றதால் சாலையை அடைத்த முன்னாள் ஊராட்சி தலைவர்
தேர்தலில் தோற்றதால் முன்னாள் ஊராட்சி தலைவர் சாலையை வேலி போட்டு அடைத்தார்.
வடமதுரை,
வடமதுரை ஒன்றியம், சுக்காம்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர் கமால்மைதீன். இவர் உள்ளாட்சி தேர்தலில் சுக்காம்பட்டி ஊராட்சி தலைவருக்கு போட்டியிட்டிருந்தார். இந்த நிலையில் தேர்தலில் கமால்மைதீன் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து நின்ற முனியப்பன் என்பவர் வெற்றி பெற்று சுக்காம்பட்டி ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கமால்மைதீன் முன்பு தலைவராக இருந்தபோது புதுப்பட்டியில் இருந்து பூசாரிபட்டிக்கு செல்ல குறுக்குவழி சாலையை தனது பட்டா நிலத்தில் அமைத்து கொடுத்திருந்தார். மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அந்த சாலையை மேம்படுத்தி தருவதாகவும் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் தேர்தலில் கமால்மைதீன் தோல்வியடைந்ததால், ஆத்திரமடைந்தார்.
இதனால் அவர் பூசாரிபட்டியில் இருந்து புதுப்பட்டி செல்லும் தனது பட்டா நிலத்தில் இருந்த சாலையை வேலி போட்டு அடைத்துவிட்டார். இதனால் பூசாரிபட்டிக்கு செல்லும் பொதுமக்கள் கருவார்பட்டி வழியாக சுமார் 6 கிலோமீட்டர் சுற்றி செல்லவேண்டிய நிலை உருவாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story