கொடைக்கானலில் பயங்கரம்: கத்தியால் குத்தி பிரபல ரவுடி படுகொலை


கொடைக்கானலில் பயங்கரம்: கத்தியால் குத்தி பிரபல ரவுடி படுகொலை
x
தினத்தந்தி 5 Jan 2020 12:00 AM GMT (Updated: 4 Jan 2020 6:44 PM GMT)

கொடைக்கானலில் கத்தியால் குத்தி பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்டார்.

கொடைக்கானல், 

தூத்துக்குடி திரவியபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் ஜான்சன் ஆரோக்கியராஜ் (வயது 55). இவர், கொடைக்கானலை அடுத்த பசுமைப்பள்ளத்தாக்கு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கழிப்பறையை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்தார்.

இவரிடம், தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்த சரவணன் (28) என்பவர் வேலை பார்த்தார். இவர்கள் 2 பேரும், பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சரவணனிடம், ஜான்சன் ஆரோக்கியராஜ் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

அந்த பணத்தை சரவணன் திரும்ப கேட்டார். ஆனால் ஜான்சன் ஆரோக்கியராஜ் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்தது.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் நள்ளிரவு, அவர்கள் தங்கியிருந்த வீட்டில் 2 பேரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன், அங்கு கிடந்த கத்தியால் ஜான்சன் ஆரோக்கியராஜை கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ஜான்சன் ஆரோக்கியராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கழுத்து பகுதியில் சொருகி இருந்த கத்தியை அகற்ற முடியவில்லை. இதனையடுத்து அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக, கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் ஜான்சன் ஆரோக்கியராஜின் மனைவி நிர்மலா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சரவணனை தேடி வந்தனர். இந்தநிலையில் கொடைக்கானல் பகுதியில் பதுங்கி இருந்த சரவணனை போலீசார் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட ஜான்சன் ஆரோக்கியராஜ் மீது தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகள் உள்ளன. குறிப்பாக தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் 2011-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கும், சிப்காட் போலீஸ் நிலையத்தில் 2017-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் 2007-ம் ஆண்டு ஒரு கொலை முயற்சி வழக்கு, தூத்துக்குடி வடபாகத்தில் 2018-ம் ஆண்டு ஒரு கொலை முயற்சி வழக்கு, தென்பாகம் போலீஸ் நிலையத்தில் 2019-ம் ஆண்டு ஒரு கொலை முயற்சி வழக்கு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் 2019-ம் ஆண்டு மோசடி வழக்கு ஆகியவை உள்ளன.

தூத்துக்குடி, நெல்லை பகுதியில் பிரபல ரவுடியாக இவர் வலம் வந்துள்ளார். பின்னர் பாதுகாப்பு கருதி கொடைக்கானல் பகுதியில் அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இவரை, தூத்துக்குடி வடபாகம் போலீசார் 2011-ம் ஆண்டு முதல் ரவுடி பட்டியலில் சேர்த்து தொடர்ந்து கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story