2,298 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு


2,298 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு
x
தினத்தந்தி 4 Jan 2020 10:30 PM GMT (Updated: 4 Jan 2020 8:01 PM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் கடலூர் மாவட்டத்தில் 2,298 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இதை கலெக்டர் அன்புசெல்வன் நேரில் ஆய்வு செய்தார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் 2020-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அன்புசெல்வன் கடந்த மாதம் 23-ந் தேதி வெளியிட்டார். இதன்படி கடலூர் மாவட்டத்தில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 948 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 38 ஆயிரத்து 556 பெண் வாக்காளர்கள், 131 இதர வாக்காளர்கள் என மொத்தம் 20 லட்சத்து 56 ஆயிரத்து 635 வாக்காளர்கள் உள்ளனர்.

இதையடுத்து வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய வருகிற 22-ந்தேதி வரை அனைத்து உதவி வாக்குப்பதிவு அலுவலர் அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களிடம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தவிர வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 4 சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்ட சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள 2,298 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது. இதில் ஏராளமான வாக்காளர்கள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க, நீக்க, மற்றும் திருத்தம் தொடர்பாக விண்ணப்பம் கொடுத்தனர். கடலூர் செம்மண்டலம் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டர் அன்புசெல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக வரப்பெற்ற விண்ணப்பங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவத்தை மாணவிகளிடம் கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார். அப்போது நகரசபை ஆணையர் ராமமூர்த்தி, தேர்தல் தாசில்தார் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story