திருக்கனூர் அருகே சவுக்கு தோப்பில் கரடி நடமாட்டமா? வனத்துறையினர் ஆய்வு


திருக்கனூர் அருகே சவுக்கு தோப்பில் கரடி நடமாட்டமா? வனத்துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Jan 2020 4:30 AM IST (Updated: 5 Jan 2020 2:55 AM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் அருகே சவுக்கு தோப்பில் கரடி நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

திருக்கனூர்,

திருக்கனூரை அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள செட்டிப்பட்டு ஏரிக் கரையையொட்டி விவசாய நிலங்கள் உள்ளன. அங்கு விவசாயிகள் பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளனர்.

செட்டிப்பட்டை சேர்ந்த விவசாயி திருமுருகன் தனது நிலத்தில் சவுக்கு பயிரிட்டிருந்தார். அது நன்கு வளர்ந்து வெட்டுவதற்கு தயாராக இருந்தது.

கரடி நடமாட்டம் என சந்தேகம்

நேற்று முன்தினம் திருமுருகன் தனது நிலத்துக்கு சென்று விவசாய வேலையில் ஈடுபட்டார். அப்போது அங்கு சவுக்கு மரக்கன்றுகளின் கிளைகள் ஒடிக்கப்பட்டு அதனை சேகரித்து ஒரு இடத்தில் படுக்கை போன்று அமைக்கப்பட்டிருப்பதை கண்டார். அேதபோல் அவருடைய நிலத்துக்கு அருகில் உள்ள மற்றொரு விவசாயியின் சவுக்கு தோப்பிலும் மரக்கிளைகள் வெட்டப்பட்டு தரையில் படுக்கை போன்று அமைக்கப்பட்டிருந்தது.

அதனால் சவுக்கு தோப்பில் கரடி நடமாட்டம் உள்ளதாக சந்தேகம் எழுந்தது. அதுகுறித்து வனத்துறையினருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் புதுச்சேரி வனத்துறை அதிகாரி தியாகராஜன் தலைமையில் வனத்துறை ஊழியர் கண்ணதாசன் உள்ளிட்டோர் சவுக்கு தோப்பு பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கரடி நடமாடியதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அதைத் தொடர்ந்து இங்கு கரடி நடமாட்டம் எதுவும் இல்லை என்றும், அதனால் விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.


Next Story