ஏர்வாடியில் நகைக்காக பெண் கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை - ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பு


ஏர்வாடியில் நகைக்காக பெண் கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை - ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 5 Jan 2020 4:15 AM IST (Updated: 5 Jan 2020 3:58 AM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடியில் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னக்கடை பகுதியை சேர்ந்தவர் ஹமீதுசுல்த்தான் என்பவரின் மனைவி சித்திபரிதா(வயது 60). இவர் ஏர்வாடி காட்டுப்பள்ளி பகுதியில் உறவினர் வீட்டில் நீண்ட நாட்களாக தங்கியிருந்துள்ளார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி இறந்து கிடந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்று கருதி உறவினர்கள் உடலை அடக்கம் செய்தனர்.

இந்தநிலையில் மதுரையில் நகைக்கடையில் நகையை அடகு வைக்க சென்ற 3 பேரை சந்தேகத்தின்பேரில் மதுரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது ஏர்வாடியில் சித்திபரிதாவை கொலை செய்து நகையை கொள்ளையடித்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஏர்வாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் 3 பேரும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த சுடலைமுத்து மகன் அருணாசலம்(22), பன்னீர்செல்வம் மகன் ராஜா(22), விருதுநகர் ராமச்சந்திரன் மகன் மாரீஸ்வரன்(24) என்பது தெரிந்தது.

இவர்கள் ஏர்வாடியில் வண்ண மீன் விற்பனை செய்வதற்காக வந்து சித்திபரிதா தங்கியிருந்த வீட்டின் அருகில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கியிருந்துள்ளனர். இவர்களுடன் மேலும் 3 பேரும் தங்கியிருந்துள்ளனர். மீன்விற்பனைக்காக அடிக்கடி சித்திபரிதாவிடம் கடன் வாங்கி உள்ளனர். இந்த நிலையில் கொடுத்த பணத்தை சித்திபரிதா திருப்பி கேட்டாராம். இந்த பணத்தினை திருப்பி கொடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றபோது தனியாக இருந்த அவரை தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 20 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றுவிட்டனராம். இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் மதுரையில் பிடிபட்ட 3 பேர் மற்றும் அவர்களுடன் தங்கியவர்கள் என 6 பேரையும் கைது செய்தனர்.

கடற்கரைப்பள்ளி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சித்திபரிதாவின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து அறிக்கை அளித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நேரில் அழைத்து வரப்பட்டு சித்திபரிதாவின் உடலை அடையாளம் காட்டினர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கினை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், நகைக்காக பெண்ணை கொலை செய்த அருணாசலம், ராஜா, மாரீஸ்வரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 3 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மனோரஞ்சிதம் ஆஜரானார்.

Next Story