பார் பெண் ஊழியரை கொன்ற கள்ளக்காதலன் கைது - மது பாட்டிலால் போலீசில் சிக்கினாா்


பார் பெண் ஊழியரை கொன்ற கள்ளக்காதலன் கைது - மது பாட்டிலால் போலீசில் சிக்கினாா்
x
தினத்தந்தி 5 Jan 2020 5:15 AM IST (Updated: 5 Jan 2020 5:15 AM IST)
t-max-icont-min-icon

பார் பெண் ஊழியர் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில், அவரை கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

மும்பை தகிசர் மேற்கு, ஜனகல்யாண் குடியிருப்பில் வசித்து வந்தவர் ரோசினா சேக் (வயது 33). பார் ஊழியரான இவர் கடந்த வாரம் வீட்டில் பிணமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் போலீசார் ரோசினா சேக் வசித்து வந்த கட்டிடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ரோசினா சேக் பிணமாக மீட்கப்பட்ட நாளுக்கு முந்தைய நாள் இரவு ஒருவர் கட்டிடத்திற்குள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. ஆனால் அவர் ரோசினா சேக் வீட்டுக்கு தான் வந்து சென்றாரா என்பதை போலீசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்தநிலையில் போலீசார் ரோசினா சேக்கின் வீட்டில் இருந்து மது பாட்டில் ஒன்றை கைப்பற்றினர். அந்த மது பாட்டில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே குடிக்கும் ரகம் ஆகும். எனவே அந்த பாட்டிலில் இருந்த பேட்ஜ் எண்ணை வைத்து அதை வாங்கியது யாா் என்பது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள மதுபான கடைகளில் விசாரித்தனா்.

அப்போது ரோசினா சேக்கின் கட்டிடத்திற்கு நுழைந்த நபர் தான் அந்த பகுதியில் இருந்த மதுபான கடையில் குறிப்பிட்ட அந்த மதுபாட்டிலை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் தகிசரில் உள்ள நகைப்பட்டறையில் வேலை பாா்த்து வந்த சுவபான் ரோகிதாஸ் (வயது32) என்பதும், அவர் சொந்த ஊரான மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹவுராவுக்கு சென்று இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சுவபான் ரோகிதாசை கைது செய்தனர்.

விசாரணையில், சுவபான் ரோகிதாசுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. தகிசரில் வேலை பார்த்த போது அவர் அந்த பகுதியில் உள்ள பாருக்கு அடிக்கடி சென்று உள்ளார். அப்போது அவருக்கும், பார் ஊழியரான ரோசினா சேக்கிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் ரோசினா சேக், சுவபான் ரோகிதாசிடம் பணம் கேட்டு தொல்லை கொடுக்க தொடங்கினார். மேலும் பணம் கொடுக்கவில்லையென்றால் கள்ளக்காதல் விவகாரம் குறித்து அவரது மனைவியிடம் சொல்லிவிடுவதாக மிரட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுவபான் ரோகிதாஸ், சம்பவத்தன்று கள்ளக்காதலியின் வீட்டில் வைத்து ரோசினா சேக்கை துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அங்கு இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகள், செல்போன்கள் மற்றும் ரூ.1¼ லட்சத்தை எடுத்து கொண்டு கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் தப்பி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story