கேபினட் அந்தஸ்து கிடைக்காததால் சிவசேனா மந்திரி அப்துல் சத்தார் ராஜினாமா?


கேபினட் அந்தஸ்து கிடைக்காததால் சிவசேனா மந்திரி அப்துல் சத்தார் ராஜினாமா?
x
தினத்தந்தி 5 Jan 2020 5:33 AM IST (Updated: 5 Jan 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

கேபினட் அந்தஸ்து கிடைக்காததால் சிவசேனா மந்திரி அப்துல் சத்தார் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை, 

அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் மந்திரி அப்துல் சத்தார் மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு முன் சிவசேனாவில் சேர்ந்து அக்கட்சி சார்பில் சில்லோடு தொகுதியில் போட்டியிட்டு 3-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார். இவருக்கு கடந்த 30-ந் தேதி நடந்த மராட்டிய மந்திரி சபை விரிவாக்கத்தின் போது மந்திரி பதவி கிடைத்தது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தில் கேபினட் அந்தஸ்து மந்திரியாக இருந்த அப்துல் சத்தாருக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தில் இணை மந்திரி பதவியே கிடைத்தது.

இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மந்திரிசபையில் கேபினட் அந்தஸ்து கிடைக்காத விரக்தியில் அவர் நேற்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியது. இது சிவசேனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அப்துல் சத்தார் மந்திரி பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுவதை சிவசேனா நிராகரித்து உள்ளது.

இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் அர்ஜூன் கோத்கர் கூறுகையில், அப்துல் சத்தார் மந்திரி பதவியை ராஜினாமா செய்ததாக வதந்தி பரப்படுகிறது. அதில் எந்த உண்மையும் இல்லை. நாளை (இன்று) அவர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்திப்பார் என்றார்.

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், மந்திரிகள் யாராவது ராஜினாமா செய்தால் வழக்கப்படி அவர்களது ராஜினாமா கடிதம் ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் அப்படி எந்த தகவலும் இதுவரை இல்லை” என்றார்.

இதுகுறித்து அப்துல் சத்தாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “நாளை (இன்று) முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்திக்க உள்ளேன். அதன்பிறகு நான் பதிலளிக்கிறேன்” என்றார்.

Next Story