உஷாரய்யா உஷாரு: மாமியாருக்கு மருமகள் கொடுத்த பதிலடி


உஷாரய்யா உஷாரு: மாமியாருக்கு மருமகள் கொடுத்த பதிலடி
x
தினத்தந்தி 5 Jan 2020 8:56 AM GMT (Updated: 5 Jan 2020 8:56 AM GMT)

போராட்டம் ஒன்றின் காரணமாக திடீரென்று கல்லூரிகளுக்கு நீண்ட விடுமுறை விடப்பட்டதால், ஹாஸ்டலில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த அவள் வீட்டிற்கு வந்திருந்தாள்.

அவள் வீட்டிற்கு ஒரே மகள். பத்தாம் வகுப்பில் தொடங்கிய அவளது ஹாஸ்டல் வாழ்க்கை இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அவள் ஹாஸ்டலிலே தங்கிப்படிக்கட்டும் என்பது அவளது அம்மாவின் விருப்பமாகவும் இருந்தது. வீட்டில் நிலவிய மகிழ்ச்சியற்ற சூழல்தான் அதற்கு காரணமாக இருந்தது.

இந்த கல்லூரி மாணவியின் அம்மாவும்- அப்பாவும் காதல் திருமணம் செய்தவர்கள். அப்பா முந்தைய காலத்தில் செல்வாக்காக இருந்த அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். அம்மா, அந்த கட்சியின் மகளிர் அணியில் இருந்து, அவரது மனதைக்கவர்ந்து, காதலித்து வாழ்க்கைத் துணைவியானவர்.

சாதாரண குடும்பத்தை சேர்ந்த அம்மாவை, திருமணமான தொடக்கநாளில் இருந்தே பாட்டிக்கு (அப்பாவின் அம்மாவுக்கு) பிடிக்காது. அதனால் வீட்டில் மாமியார்- மருமகள் சண்டை எப்போதும் நடக்கும். வெளியே புன்னகை முகமாய், கருணையின் வடிவாய் கை நீட்டியவர் களுக்கெல்லாம் அள்ளிக்கொடுக்கும் பாட்டி, வீட்டிற்குள்ளே மருமகளிடம் கொடூர முகம் காட்டிக்கொண்டிருந்தார். ‘எதை காட்டி என் மகனை மயக்கினாய்? உன்னிடம் இருந்து மீள முடியாத அளவுக்கு அவனை எப்படி வசியம் செய்தாய்?’ என்று பாட்டி, ஆத்திரத்தில் அம்மாவிடம் அசிங்கமான வார்த்தைகளை உதிர்த்தது இவள் காதிலும் பலமுறை விழுந்திருக்கிறது.

அம்மா, அதுவரை நடந்தவை அனைத்தையும் இவளிடம் கூறி தான் ஹாஸ்டலுக்கு அனுப்பிவைத்தார். ‘எனது 26 வயதில் எங்கள் திருமணம் நடந்தது. உன் அப்பாதான் விரும்பி என்னை காதலித்து திருமணம் செய்தார். நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். வசதியான உன் பாட்டி என்னை மனமுவந்து மருமகளாக ஏற்றுக்கொண்டதாக ஊடகங்கள் வாயிலாக சொல்லி, அதன் மூலம் தன்னை பரந்தமனப்பான்மை கொண்டவராக காட்டி, தனது தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக்கொண்டார். ஆனால் வீட்டிற்குள் என்னை சித்ரவதை செய்கிறார்.

எனது பெற்றோரோ, உறவினர்களோ வீட்டிற்கு வந்தால் நன்றாக உபசரித்து நல்ல பெயர் வாங்கிவிட்டு அன்று இரவே ஏதாவது ஒரு நகையை எடுத்து ஒழித்துவைத்துவிட்டு, மறுநாள் என் குடும்பத்தினர் சென்றதும், அவர்கள்தான் அதை திருடிவிட்டு சென்றதாக கூறி என்னை அவமானப்படுத்துவார். உன் அப்பாவுக்கு நான் செய்துவைத்திருக்கும் உணவில் எனக்கு தெரியாமல் அதிகமாக உப்பையோ மசாலாக்களையோ வாரிக்கொட்டி எனக்கு திட்டுவாங்கித் தருவார். இப்படி என் வாழ்க்கையையே அழித்துக்கொண்டிருக்கும் என் மாமியாரின் கோபம், என்னையே உரித்துவைத்ததுபோல் இருக்கும் உன் மீதும் பாயலாம். அதனால் நீ இங்கிருக்க வேண்டாம்’ என்று கூறி ஹாஸ்டலுக்கு அனுப்பிவைத்தார்.

அம்மாவின் பரிதாப வாழ்க்கையை நினைத்து கவலைகொண்ட அவள், ஹாஸ்டலில் இருந்துகொண்டே அவ்வப்போது போனில் பேசி ஆறுதல் சொல்வாள். இந்த நிலையில்தான் அவள் திடீர் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.

வீட்டில் சூழ்நிலை அடியோடு மாறிப்போயிருந்தது. எப்போதும் பளபளப்பான ‘மேக்அப்’புடன் தேர்போன்று உலாவரும் பாட்டி திடீர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையாகியிருந்தார். பேச முடியாத அளவுக்கு ஒரு பக்க வாயும் கோணலாகியிருந்தது. அவர் ஒன்றை நினைத்து பேசினால், வார்த்தை வெளியே இன்னொருவிதமாய் வந்துவிழுந்து கொண்டிருந்தது.

பாட்டியின் இந்த சோக நிலை, அப்பாவை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியது. பாட்டியை கவனித்துக்கொள்ள தேர்ச்சி பெற்ற செவிலியர்கள் இரண்டு பேரை அப்பா நியமிக்க, அம்மாவோ ‘மாமியாரை கவனித்துக்கொள்வது மருமகளின் கடமை. நானே பராமரிக்கிறேன். ஹோம் நர்ஸ் யாரும் தேவையில்லை’ என்று வாதாடினார். அதோடு மாமியார் மீது தனக்கு மிகுந்த பாசம் இருப்பதுபோலவும் காட்டிக்கொண்டார்.

நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவியான அவளுக்கு எங்கோ நெருடியது. தாயின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று புரியாமல் தவித்தாள். தாயாரை தனியாக அழைத்துச்சென்று காரணத்தை கேட்டபோது உள்ளபடியே அவள் அதிர்ந்து போனாள்.

‘கல்யாணமானதில் இருந்து 22 வருஷங் களாக இவங்களால் நான் என்ன கொடுமைகளை எல்லாம் அனுபவிச்சிருக்கேன் என்பது உனக்கும் தெரியும். என் இளமை, வாழ்க்கை எல்லாத்தையும் சிதைச்சி மனநோயாளி மாதிரி ஆக்கிவிட்ட இந்த பொம்பிள்ளையை பழிவாங்கவே கடவுள் இப்போ இவரை படுக்கையில் தள்ளியிருக்கிறார்.

கடவுளாக தந்திருக்கும் இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ளப்போகிறேன். நர்ஸ்கள் யாரும் உதவிக்கு இல்லாமல் இருந்தால்தான் நான் நினைச்சபடி இவங்களை பழிவாங்க முடியும். எனக்கு இதுவரை செய்த துரோகங்களை எல்லாம் பக்கத்தில் இருந்து சொல்லிக்காண்பிக்க போறேன். நேரத்திற்கு சாப்பாடுகொடுக்காமல் என் ஆத்திரத்தை எல்லாம் தீர்க்கப்போகிறேன். எனக்கு செய்த துரோகங்களுக்கு நானே உன் பாட்டிக்கு தண்டனை கொடுக்கப்போகிறேன்..’ என்று உணர்ச்சிபிழம்பாய் பொங்கிய அம்மாவை, மகள் ஆதரவாய் அணைத்து அமைதிப்படுத்தினாள்.

‘அம்மா..! நீ தைரியம் இல்லாதவள். உன்னை பாட்டி குட்டகுட்ட நீ குனிந்திருக்கக்கூடாது. எதிர்த்து போராடியிருக்கணும். நீ யார் என்பதை நிரூபித்திருக்கவேண்டும். நீ வாயில்லா பூச்சியாக இருந்ததால்தானே உன்னை இத்தனை காலம் பாட்டி சித்ரவதை செய்தார். இப்போது அவர் நிராயுதபாணி. இந்த நேரத்தில் அவரை பழிவாங்கினால், போய்விட்ட உன் இளமையும், வாழ்க்கையும் திரும்பக்கிடைக்குமா? கிடைக்காது. குற்ற உணர்ச்சிதான் ஏற்படும். நீ பழிவாங்குவது ஏதாவது ஒருவிதத்தில் உன் மகளான என்னையும் பாதிக்கத்தானே செய்யும். அதனால் பாட்டியை நீ கண்கொண்டே பார்க்காதே. ஹோம் நர்ஸ்கள் வந்து அவரை பராமரிக்கட்டும். நடந்ததை எல்லாம் கெட்ட கனவாக மறந்துவிட்டு, நீ உன் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கும் வழியை பார். இந்த ஆண்டோடு நானும் ஹாஸ்டல் வாழ்க்கையை முடித்துவிட்டு வீடு திரும்பிவிடுவேன். உன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்திடலாம். இந்த பிரச்சினையை இதோடு விட்டுடும்மா..’ என்று கெஞ்சி, அம்மாவின் மனதை மகள் மாற்றியிருக்கிறாள்.

நீங்கள் மாமியாராக இருந்தால் இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  அளவுக்கு மீறி ஆட்டம்போடாதீர்கள். மருமகள்கள் பதிலடி கொடுக்க காத்திருக்கிறார்கள்!

- உஷாரு வரும்.

Next Story