திருவண்ணாமலையில், ஆடையூர் பகுதி மக்கள் திடீர் தர்ணா போராட்டம்


திருவண்ணாமலையில், ஆடையூர் பகுதி மக்கள் திடீர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2020 10:30 PM GMT (Updated: 5 Jan 2020 12:59 PM GMT)

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆடையூர் பகுதி மக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை டேனிஷ் மி‌ஷன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2–ந் தேதி நடந்தது. இதில் ஆடையூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட தேவதாஸ் என்பவரும், கலைவாணி என்பவரும் சமமாக ஆளுக்கு 905 வாக்குகள் பெற்று இருந்தனர்.

இருவரும் ஒரே அளவு வாக்குகள் பெற்றிருந்ததால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் 2 வேட்பாளர்களின் பெயரையும் துண்டு சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

பின்னர் குலுக்கல் முறையில் நடந்த தேர்வில் கலைவாணி வெற்றி பெற்றார். தேவதாஸ் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் தேவதாசின் ஆதரவாளர்கள் 50–க்கும் மேற்பட்ட ஆடையூர் பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆடையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகள் எண்ணப்பட வில்லை என்றும், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாகவும் கூறி கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் அவர்கள் வாக்கு எண்ணிக்கையை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, சுப்பிரமணியம் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். மேலும் 30–க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசாரும் அங்கு திரண்டனர்.

இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தை அணுக வேண்டும். இதுபோன்று போராட்டத்தில் ஈடுபட கூடாது என்று போலீசார் கூறினர்.

இந்த தர்ணா போராட்டம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story