ஜோலார்பேட்டை அருகே, பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்


ஜோலார்பேட்டை அருகே, பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
x
தினத்தந்தி 5 Jan 2020 10:15 PM GMT (Updated: 5 Jan 2020 1:06 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

ஜோலார்பேட்டை,

பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 547 ரே‌ஷன் கடைகளில் 3,12,971 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். நேற்று காலை ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டியில் உள்ள ரே‌ஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். கற்பகம் கூட்டுறவு பண்டக சாலை இணைப்பதிவாளர் திருகுணஜயப்பதுரை வரவேற்றார். வேலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரமேஷ், ஜோலார்பேட்டை நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சீனிவாசன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு ரூ.1000 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு துண்டு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.

அதன் பிறகு சோலையூர் மற்றும் சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. மீதமுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 9–ந் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு வழங்கப்படும்.

விழாவில் ஜோலார்பேட்டை முன்னாள் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ரமேஷ், ஜோலார்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் சண்முகம், மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருப்புத்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் முனிராஜி நன்றி கூறினார்.

Next Story