ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.1000-த்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது


ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.1000-த்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 5 Jan 2020 11:00 PM GMT (Updated: 5 Jan 2020 5:02 PM GMT)

திருச்சியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

திருச்சி,

அரிசி பெறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா திருச்சி அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கினார். இந்த விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசிய தாவது:-

9-ந்தேதி முதல்...

திருச்சி மாவட்டத்தில் 7 லட்சத்து 78 ஆயிரத்து 101 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.89 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். வருகிற 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 1,226 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். ரேஷன் கார்டுதாரர்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் இதனை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகை, திருமண உதவி தொகை, விபத்து நிவாரணம், இயற்கை மரண உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம், ஊரக வளர்ச்சி பணிகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களால் பயன் அடையும் ஏழை, எளிய மக்கள் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மணப்பாறை

இதுபோல் மணப்பாறை அருகே வெள்ளபூலாம்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை அ.தி.மு.க. ஒன்றியச்செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு உள்பட அதிகாரிகள், அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story