குன்னூர் ஏல மையத்தில், தேயிலை தூள் விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு
குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூள் விலை கிலோவுக்கு ரூ.2 உயர்ந்தது.
குன்னூர்,
இந்தியாவில் தேயிலை வணிக பொருளாக உள்ளது. இந்தியாவில் வட மற்றும் தென் மாநிலங்களில் உற்பத்தியாகும் தேயிலை தூள் உள்நாட்டு நுகர்வு பொருளாக மட்டுமின்றி வெளிநாட்டு ஏற்றுமதி பொருளாகவும் உள்ளது. வட மாநிலத்தில் உற்பத்தியாகும் தேயிலை தூள் கொல்கத்தா, கவுஹாத்தி, சிலிகுரி ஆகிய இடங்களில் உள்ள ஏல மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தென் மாநிலங்களில் கேரள மாநிலம் கொச்சி, தமிழகத்தில் குன்னூர், கோவை ஆகிய தேயிலை ஏல மையங்களிலும் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் நடைபெறும் தேயிலை ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்களில் நடக்கிறது. வியாழக்கிழமை இலை ரகதேயிலை தூளும், வெள்ளிக்கிழமை டஸ்ட் ரக தேயிலை தூளும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டின் கடைசி ஏலம் விற்பனை எண் 51-க்கான ஏலம் கடந்த 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதன் பின்னர் இந்த ஆண்டின் முதல் ஏலம் கடந்த 2, 3-ந் தேதிகளில் நடைபெற்றது.
ஏலத்திற்கு மொத்தம் 15 லட்சத்து 70 ஆயிரம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தது. இதில் 10 லட்சத்து 90 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 80 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 80 சதவிகித தேயிலை தூள் விற்பனையானது. விற்பனையான தேயிலை தூளின் அளவு 12 லட்சத்து 49 ஆயிரம் கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.10 கோடியே 52 லட்சம் ஆகும்.
விற்பனையான அனைத்து தேயிலை தூள் ரகங்களுக்கும் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. சி.டி.சி. தேயிலை தூள் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.297-க்கு ஏலம் போனது. ஆர்தோ டக்ஸ் தேயிலை தூள் கிலோ ஒன்று ரூ.254-க்கு ஏலம் போனது. சராசரி விலையாக இலைரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்று ரூ.62-ல் இருந்து ரூ.69 வரையும், விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ஒன்று ரூ.115-ல் இருந்து ரூ.147 வரையும் ஏலம் சென்றது.
டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோ ஒன்று ரூ.65-ல் இருந்து ரூ.73 வரையும், விலை உயர்ந்த தேயிலை தூள் ரூ.120-ல் இருந்து ரூ.150 வரையும் ஏலம் சென்றது.
விற்பனை எண் 2-க்கான ஏலம் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஏலத்திற்கு மொத்தம் 16 லட்சத்து 78 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வருகிறது. இந்த ஆண்டில் நடைபெற்ற முதல் ஏலத்தில் தேயிலை தூளுக்கு விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு எதிர்வரும் ஏலங்களில் தொடருமா என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story