என்.எல்.சி. சுரங்கத்தில் திருட முயன்றதை தடுத்த பாதுகாப்பு படைவீரருக்கு சரமாரி கத்திக்குத்து - 2 பேர் கைது


என்.எல்.சி. சுரங்கத்தில் திருட முயன்றதை தடுத்த பாதுகாப்பு படைவீரருக்கு சரமாரி கத்திக்குத்து - 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Jan 2020 3:15 AM IST (Updated: 5 Jan 2020 11:30 PM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி. சுரங்கத்தில் திருட முயன்றதை தடுத்த மத்திய தொழிலக பாதுகாப்பு படைவீரரை சரமாரியாக கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மந்தாரக்குப்பம்,

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் தங்கதுரை மகன் செல்வேந்திரன்(வயது 40). இவர் மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி. 2-வது நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் செல்வேந்திரன், 2-வது சுரங்க நுழைவு வாயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மந்தாரக்குப்பம் ஓம்சக்தி நகரை சேர்ந்த கண்ணன் மகன் பெங்களூர் மணி, மணிகண்டன் மகன் சபரிவாசன்(20), சண்முகம்(19), சுதாகர் ஆகியோர் தாமிர கம்பி, இரும்பு உள்ளிட்ட பொருட்களை திருடுவதற்காக சுரங்கத்திற்கு சென்றனர். அங்குள்ள பொருட்களை திருட முயன்றனர்.

இதைப்பார்த்த செல்வேந்திரன், அங்கு சென்று 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி கொண்டிருந்தார். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வேந்திரனை சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த செல்வேந்திரன், வலியால் அலறித்துடித்தார். இவரது சத்தம் கேட்டு அருகில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது.

இது குறித்து மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் செல்வேந்திரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாள் வழக்குப்பதிவு செய்து சபரிவாசன், சண்முகம் ஆகிய 2 பேரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள பெங்களூரு மணி, சுதாகர் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story