ஓசூர் அருகே தமிழக போலீசாரை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம் 130 பேர் கைது


ஓசூர் அருகே தமிழக போலீசாரை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம் 130 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2020 11:00 PM GMT (Updated: 5 Jan 2020 7:30 PM GMT)

ஓசூர் அருகே தமிழக போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர்,

கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரு வேனில் அய்யப்ப பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றனர். இதையொட்டி அந்த வேனில் கர்நாடக மாநில கொடியை அவர்கள் கட்டி சென்றனர். கிரு‌‌ஷ்ணகிரி அருகே வந்த போது போலீசாரும், மர்ம நபர்களும் கர்நாடக பக்தர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் கிரு‌‌ஷ்ணகிரி சுங்கச்சாவடியில் வந்த போது போலீசார் வழிமறித்து வேனில் கொடியை கட்டி சென்றால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது எனக்கூறி கர்நாடக மாநில கொடியை அகற்றியதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், இது குறித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட அமைப்பினரிடம் தெரிவித்தனர். இது தொடர்பான செய்திகள் கர்நாடக மாநிலத்தில் சமூக வலைதளங்களில் பரவியது.

போலீசார் குவிப்பு

இந்தநிலையில் நேற்று தமிழக போலீசாரை கண்டித்து கன்னட ஜாக்ருதி வேதிகே, கர்நாடக ரக்‌‌ஷன வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புகள் சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் கர்நாடக மாநில கொடியை கட்டியவாறு தமிழக எல்லையான கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடிக்குள் நுழைய உள்ளதாக இரு மாநில போலீசாருக்கும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தமிழக போலீசார், தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி அருகிலும், கர்நாடக போலீசார் அத்திப்பள்ளி எல்லையிலும் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் கன்னட அமைப்பினர் கார்கள், ஆட்டோக்கள், மோட்டார்சைக்கிள்களில் கர்நாடக மாநில கொடியை கட்டிக்கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

கன்னட அமைப்பினர் கைது

மேலும் தமிழக போலீசாரை கண்டித்து கோ‌‌ஷங்களும் எழுப்பியும், கர்நாடக பக்தர்களை தாக்கிய போலீசார் மற்றும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், அவர்கள் தமிழக எல்லைக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்கள் அனைவரையும் தடுப்பு வேலிகளை கொண்டு கர்நாடக போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் 130 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக மாநில எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது, மேலும், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story