கறம்பக்குடி பகுதியில் கதிர் அறுக்கும் எந்திரம் கிடைக்காததால் அறுவடை பணிகள் பாதிப்பு விவசாயிகள் கவலை


கறம்பக்குடி பகுதியில் கதிர் அறுக்கும் எந்திரம் கிடைக்காததால் அறுவடை பணிகள் பாதிப்பு விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 5 Jan 2020 10:45 PM GMT (Updated: 5 Jan 2020 8:28 PM GMT)

கறம்பக்குடி பகுதியில் கதிர் அறுக்கும் எந்திரம் கிடைக்காததால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் இந்த ஆண்டு பருவமழை நன்கு பெய்து ஏரி, குளங்களில் தண்ணீர் தேங்கின. காவிரி பாசன பகுதிகளில் தடையின்றி தண்ணீர் கிடைத்தது. இதனால் சம்பா சாகுபடி பணி தடையின்றி நடைபெற்றது. தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சாகுபடி பரப்பளவும் அதிகரித்தது. தற்போது கறம்பக்குடி தாலுகா பகுதியில் உள்ள பெரும்பான்மையான வயல் பகுதிகளில் நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் கறம்பக்குடி பகுதியில் போதிய கதிர் அறுக்கும் எந்திரம் கிடைக்காததால் நெல் அறுவடை பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கதிர் முற்றியும் அறுவடை செய்யாமல் இருந்தால் நெல் மணிகள் உதிர்ந்து சேதமாக வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து கறம்பக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

கறம்பக்குடி பகுதிக்கு கதிர் அறுக்கும் எந்திரங்கள் சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளிலிருந்து ஆண்டு தோறும் வரும். இந்த ஆண்டு அந்த பகுதிகளிலும் நல்ல விளைச்சல் இருந்ததாலும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அந்த பகுதிகளில் இருந்து எந்திரங்கள் வரவில்லை. எங்கள் பகுதியில் உள்ள எந்திரங்கள் போதுமானதாக இல்லை. இதனால் விவசாயிகள் பலர் அறுவடை பணியை நிறுத்தி கதிர் அறுக்கும் எந்திரத்தின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

எனவே நெல் அறுவடை பணிகள் தடையின்றி நடைபெற போதுமான கதிர் அறுக்கும் எந்திரம் கிடைக்க வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


Next Story