பேரணாம்பட்டு ஒன்றியம், ரெட்டிமாங்குப்பம் ஏரியின் கரை, கால்வாய்களை சீரமைக்க உத்தரவு - கலெக்டர் நடவடிக்கை
ரெட்டிமாங்குப்பம் ஏரியின் கரை மற்றும் கால்வாய்களை சீரமைக்க கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு ஒன்றியம் ராஜக்கல் ஊராட்சியில் ரெட்டிமாங்குப்பம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியானது பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 57 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியை குடிமராமத்து பணியின் கீழ் ஆழப்படுத்தி தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிலையில் பேரணாம்பட்டு ஒன்றியத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ரெட்டிமாங்குப்பத்தில் உள்ள பெரிய ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரிக்கு நீர்வரத்து வரக்கூடிய பகுதி, மழைக்காலங்களில் வரும் மழைநீரை ஏரியில் சேமிப்பது குறித்து கேட்டறிந்தார். ஏரி கரையில் பள்ளங்கள் காணப்பட்டதால் ஏரிக்கரையை பலப்படுத்தும் படியும், ஏரிக்கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்தும்படியும் சீரமைப்பு பணியில் ஈடுபட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது ராஜக்கல் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஊராட்சி மூலம் கிடைத்துவரும் குடிநீர் போதுமானதாக இல்லை. கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தங்கள் ஊராட்சியை இணைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெட்டிமாங்குப்பம் ஏரிக்கரை பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் மண் சாலை மழைக்காலங்களில் சகதியாக மாறுவதால் அந்த வழியாக விவசாயிகள் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் ஏரிக்கு வரும் கால்வாய் நுழைவு பகுதியில் 200 அடியில் தடுப்பணை அமைத்து ஏரிக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யும்படியும் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தார் சாலை அமைப்பது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 100 அடியில் தடுப்பணை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
அப்போது பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், ஹேமலதா, தாசில்தார் முருகன், மண்டல துணை தாசில்தார் வடிவேல், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, பாலாஜி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story