கிரு‌‌ஷ்ணகிரியில் தர்பார் பட சிறப்பு காட்சிக்கு தடை போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவு


கிரு‌‌ஷ்ணகிரியில் தர்பார் பட சிறப்பு காட்சிக்கு தடை போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Jan 2020 11:15 PM GMT (Updated: 5 Jan 2020 9:27 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரியில் தர்பார் பட சிறப்பு காட்சிக்கு தடை விதித்து போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி ரீலிஸ் ஆனது. கிரு‌‌ஷ்ணகிரியில் பிகில் படத்தின் ரசிகர் மன்ற சிறப்பு காட்சி அதிகாலையில் வெளியாவதில் தாமதம் ஆனதால் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாரின் கண்காணிப்பு கேமராக்கள், சிக்னல்கள், சாலையோர கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாலைகளில் பல பேனர்களை கிழித்து ரசிகர்கள் தீயிட்டு எரித்தனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விஜய் ரசிகர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் கிரு‌‌ஷ்ணகிரியில் நடிகர்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகள், தியேட்டர் உரிமையாளர்களுடன் போலீசார் நடத்திய ஆலோசனை கூட்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர் (கிரு‌‌ஷ்ணகிரி டவுன்), சுரே‌‌ஷ்குமார் (தாலுகா) மற்றும் போலீசார், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து நடிகர்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் பேசியதாவது:-

பிகில் படம் ரிலீஸ் ஆன போது, ரசிகர் மன்ற சிறப்பு காட்சி வெளியாக தாமதம் ஆனதால் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ரூ.10 லட்சம் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இனி வரும் காலங்களில் கிரு‌‌ஷ்ணகிரியில் எந்த நடிகர்களின் படங்களையும் ரசிகர் மன்ற சிறப்பு காட்சி ஒளிபரப்ப கூடாது என்று காவல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு காட்சிக்கு தடை

ரசிகர் மன்றங்களுக்கு என்று எந்த சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி கிடையாது. வழக்கமாக தினமும் காலை முதல் இரவு வரையில் இருக்க கூடிய காட்சிகளையே அனைத்து தியேட்டர்களும் பின்பற்ற வேண்டும். கிரு‌‌ஷ்ணகிரி நகரம், காவேரிப்பட்டணம் ஆகிய பகுதிகளில் உள்ள தியேட்டர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அதிகாலையில் தியேட்டர்கள் முன்பு திரண்டு தகராறில் ஈடுபடுவது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் தர்பார் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 9-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. தற்போது கிரு‌‌ஷ்ணகிரி நகரில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சிக்கு போலீசார் தடை விதித்துள்ளதால் கிரு‌‌ஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணத்தில் 6 தியேட்டர்களில் தர்பார் படத்திற்கு ரசிகர் மன்ற சிறப்பு காட்சி கிடையாது.

கலெக்டரிடம் மனு

அதே போல கிரு‌‌ஷ்ணகிரி நகரில் உள்ள 7 தியேட்டர்களிலும், காவேரிப்பட்டணத்தில் உள்ள 3 தியேட்டர்களிலும் என மொத்தம் உள்ள 10 தியேட்டர்களில் இனி வரும் காலங்களில் எந்த நடிகர்களின் படங்களுக்கும் ரசிகர் மன்ற சிறப்பு காட்சிகள் கிடையாது என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் இந்த அதிரடி உத்தரவால் வருகிற 9-ந் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து அனைத்து நடிகர்களின் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் சார்பில் மாவட்ட கலெக்டரை சந்தித்து போலீசாரின் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Next Story