தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட வேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
சிவகாசி,
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 இடங்களில் நடைபெற்ற அரசுவிழாவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர்களில் அதிகமான இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் பெரும் பலப்பரிட்சையாகதான் கருதுகிறோம். அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இது ஒரு பயிற்சியாக தான் கருத முடியும். தி.மு.க.வினர் வெறித்தனமாக தேர்தல் பணியாற்றினார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் நாம் ஜெயித்து விடுவோம் என்று நம்பிக்கையில் இருந்துவிட்டனர். ஆகையால் சில இடங்களில் வெற்றி வாய்ப்புகளை இழந்து உள்ளோம்.
இது போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததற்காக சிறுபான்மையினர் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அதுபோன்ற நிகழ்வுகள் இருந்திருக்கலாம் என்ற கருத்தில் அன்வர்ராஜா கூறியிருக்கிறார். மாநிலம் முழுவதிலும் அ.தி.மு.க.விற்கு இஸ்லாமிய பெருமக்கள், கிறிஸ்தவர்கள் ஏராளமான வாக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாக இருந்தது. அதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன். இது மன்னர் காலம் கிடையாது. வாக்காளர்கள் கையில் வாக்குச்சீட்டு உள்ளது. எனவே தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட்டு களத்தில் நிற்க வேண்டும்.
அப்போதுதான் வீரன் யார் என்று களத்தில் தெரியவரும். இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. தனித்து நின்றது. 25 கட்சிகளோடு தி.மு.க. கூட்டணி வைத்து போட்டியிட்டது. தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தனித்து நிற்க வேண்டுமென்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் ஒரு சதவீதம் கூட தவறுகள் நடக்காத அளவுக்கு தேர்தல் ஆணையம் தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் அனைத்து பதவிகளையும் கைப்பற்ற புதிய வியூகத்தை நாங்கள் அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வக்கீல் கணேசன், விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆரோக்கியராஜ், ஒன்றிய செயலாளர் பலராமன், சிவகாசி நகர செயலாளர் அசன்பதுருதீன், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட நிர்வாகி மாரியப்பன், தொகுதி கருப்பசாமிபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story