நாகர்கோவிலில் சாலை ஓரம் மூடை, மூடையாக பதுக்கி வைத்த 726 மதுபாட்டில்கள் பறிமுதல்


நாகர்கோவிலில் சாலை ஓரம் மூடை, மூடையாக பதுக்கி வைத்த 726 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jan 2020 10:45 PM GMT (Updated: 5 Jan 2020 10:29 PM GMT)

நாகர்கோவிலில் திருட்டுத்தனமாக விற்பனை செய்வதற்காக சாலை ஓரம் மூடை, மூடையாக பதுக்கி வைத்திருந்த 726 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட வேண்டும். இதனையும் மீறி சில இடங்களில் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுகிறது. இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதே சமயத்தில், குமரி மாவட்டத்தில் அதிகாலை 4 மணியாக இருந்தாலும் சரி, மதுக்கடைகள் விடுமுறை தினமாக இருந்தாலும் சரி சட்டத்திற்கு விரோதமாக மதுவிற்பனை நடக்கிறது. அதாவது டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாக வாங்கி வந்து கூடுதல் விலைக்கு திருட்டுத்தனமாக எந்த நேரத்திலும் மர்ம நபர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.

எனவே குமரி மாவட்டத்தில் திருட்டு மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக வடசேரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சாலை ஓரம் நின்று கொண்டிருந்த ஒரு மர்ம நபர் போலீசாரை பார்த்ததும் ஓடினார். உடனே அவரை பிடிக்க போலீசார் முயன்றனர். எனினும் மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.

இதைத் தொடர்ந்து அந்த மர்ம நபர் நின்று கொண்டிருந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சாலை ஓரத்தில் சில சாக்கு மூடைகள் கிடந்தன. இந்த மூடைகளை போலீசார் அவிழ்த்து பார்த்தபோது அதில் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அதாவது தப்பியோடிய மர்ம நபர் மதுபானங்களை சாக்குமூடையில் கட்டி வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மதுபாட்டில்களை சாக்கு மூடையில் கட்டி வைத்துள்ளார். இதனையடுத்து சாக்கு மூடைகளில் வைத்திருந்த 726 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரசியல் கட்சி பிரமுகர்

ஆனால் தப்பி ஓடிய மர்ம நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட மர்ம நபர் அரசியல் கட்சி பிரமுகர் என்பது தெரிய வந்தது. எனினும் எந்த கட்சியை சேர்ந்தவர் என்ற தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அரசியல் கட்சி பிரமுகரை தேடி வருகிறார்கள்.

வடசேரி போலீஸ் சரகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்டதாக 2,500 மதுபாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story