தண்டவாளத்தில் கிடந்தபெண்ணின் தலையால் பரபரப்பு - போலீசார் விசாரணை


தண்டவாளத்தில் கிடந்தபெண்ணின் தலையால் பரபரப்பு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 Jan 2020 5:15 AM IST (Updated: 6 Jan 2020 5:02 AM IST)
t-max-icont-min-icon

காட்கோபரில் தண்டவாளத்தில் பெண் ஒருவரின் தலை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை, 

மும்பை காட்கோபர் மேற்கு கிராட் ரோட்டில் உள்ள அரசு பஸ் பணிமனை அருகில் கடந்த மாதம் 30-ந் தேதி தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் உடல் மீட்கப்பட்டது.

மறுநாள் (31-ந் தேதி) காட்கோபர் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் ரெக்சின் சீட்டில் சுற்றி வைக்கப்பட்டு இருந்த நிலையில் பெண்ணின் 2கால்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் தலையை தேடி வந்தனர். மேலும் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை காட்கோபர், சாந்தாகுருஸ் - செம்பூர் லிங் ரோட்டின் கீழே செல்லும் தண்டவாளப்பகுதியில் பெண் ஒருவரின் தலை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் தலையை மீட்டு ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கடந்த 30-ந் தேதி தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் உடல் அருகே உள்ள இடத்தில் இருந்து சிறிது தொலைவில் தான் நேற்று தலையும் மீட்கப்பட்டுள்ளது. எனவே மீட்கப்பட்ட தலை அந்த பெண்ணுடையதாக தான் இருக்கும் என போலீசார் கூறினர். தலையை கொலையாளி சாந்தாகுருஸ்-செம்பூா் லிங் ரோட்டின் பாலத்தில் இருந்து கீழே உள்ள தண்டவாளத்தில் வீசி சென்றிருக்கலாம் எனவும்போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் நியதி தாக்கூர்கூறுகையில், ‘‘துண்டிக்கப்பட்ட தலையை சாந்தாகுருஸ்-செம்பூர் லிங் ரோடு பாலத்தின் கீழே உள்ள தண்டவாள பகுதியில் இருந்து மீட்டோம். ஏற்கனவே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடலும் இந்த பகுதிக்கு அருகில் தான் மீட்கப்பட்டது. எனவே மீட்கப்பட்ட தலை அந்த பெண்ணுடையதாக தான் இருக்கும் என நினைக்கிறோம். அதை உறுதி செய்ய மீட்கப்பட்ட தலையை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம்’’ என்றார்.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக மும்பை, தானேயில் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி பாகங்களை வீசும் சம்பவங்கள் அதி கரித்து உள்ளன. சமீபத்தில் சாந்தாகுருசில் வளர்ப்பு மகள், தந்தையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசினார். இதேபோல தானே மாவட்டத் தில் வேறு சமூக வாலிபரை காதலித்த மகளை, தந்தை கொலை செய்து உடலை துண்டாக வெட்டிவீசிய சம்பவம் நடந்தது குறிப் பிடத்தக்கது.

Next Story