திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 6 Jan 2020 10:15 PM GMT (Updated: 6 Jan 2020 2:50 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். சாமி தரிசனம் செய்யும் பெரும்பாலான பக்தர்கள் நகரின் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. பின்னர் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை சுமார் 5.30 மணியளவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக கோவிலில் உள்ள பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சாமிக்கும், கஜலட்சுமி அம்மனுக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பக்தர்கள் சாமி சன்னதியில் இருந்து பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்தனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள குபேர பெருமாள், சின்னக்கடை தெருவில் உள்ள பூத நாராயணர், அண்ணா நுழைவு வாயில் அருகேயுள்ள சீனிவாச பெருமாள் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story