சோளிங்கரில் இணைக்கப்பட்ட கிராமங்கள் மீண்டும் வாலாஜா தாலுகாவிலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை


சோளிங்கரில் இணைக்கப்பட்ட கிராமங்கள் மீண்டும் வாலாஜா தாலுகாவிலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Jan 2020 10:30 PM GMT (Updated: 6 Jan 2020 5:03 PM GMT)

சோளிங்கர் தாலுகாவில் இணைக்கப்பட்ட கிராமங்கள் மீண்டும் வாலாஜா தாலுகாவிலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று கலெக்டர் திவ்யதர்‌ஷினி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஸ்ரீவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நிலப்பட்டா, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் ஆற்காடு தாலுகா சாத்தூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக சரிவர திறக்கப்படாமல் உள்ள நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஒழுகூர், கொளத்தேரி, தலங்கை, கோவிந்தசேரிகுப்பம், வாங்கூர், வீராணம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

நாங்கள் வாலாஜா தாலுகாவில் இருந்து வந்தோம். தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள சோளிங்கர் தாலுகாவில் இணைக்கப்பட்டுள்ளன. நாங்கள் வாலாஜா தாலுகா அலுவலகத்திற்கு 8 கி.மீ தொலைவிற்குள் வந்து செல்லலாம். ஆனால் தற்போது சோளிங்கர் தாலுகாவில் இணைக்கப்பட்டுள்ளதால் சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் நாங்கள் மீண்டும் வாலாஜாவிற்கு வந்து, சோளிங்கருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமார் 33 கி.மீ தொலைவிற்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே சோளிங்கர் தாலுகாவில் இணைக்கப்பட்டுள்ள தங்கள் கிராமங்களை பிரித்து மீண்டும் வாலாஜா தாலுகாவிலேயே இணைக்க வேண்டும், அதேபோல் ஒழுகூரில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் புதிதாக அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நெமிலி தாலுகா அவளூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், அவளூர், மேலபுலம்புதூர், களத்தூர், நங்கமங்கலம்புதூர், அவளூர் காலனி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்கும், மாணவ, மாணவிகள் பள்ளிக்கும், ஊர் திருவிழா நேரத்தில் தேர்வீதி உலா செல்வதற்கும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வதற்கும், இறந்தவர்களின் உடல்களை இடுகாட்டிற்கு தூக்கி செல்வதற்கும் சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. தற்போது சாலை விரிவாக்கம் செய்ய இருப்பதால் சாலை நடுவில் உள்ள பாதை மூடப்பட உள்ளதாக தெரிகிறது. எனவே கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வாலாஜாவை சேர்ந்த நடைபாதை வியாபாரிகள் கொடுத்துள்ள மனுவில், நாங்கள் பல ஆண்டுகளாக நடைபாதையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து பிழைத்து வந்தோம். எங்களது கடைகளை அகற்றியதால் தற்போது மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே நடைபாதையில் மேற்கூரையின்றி திறந்தவெளியில் சிறு வியாபாரம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேல்வி‌ஷாரம் பைபாஸ் ரோடு ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மின் விளக்குகள் எரிவதில்லை, கால்வாய், சாலை வசதி, குப்பைகள் கொட்டுவதற்கும், கழிவுநீர் வெளியேறுவதற்கும் வசதி இல்லை. எனவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் குப்பன், ரமே‌‌ஷ், கோவிந்தசாமி ஆகிய 3 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 34ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிக்கான காசோலைகளை கலெக்டர் திவ்யதர்‌ஷினி வழங்கினார்.

இதில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story