பதவியேற்பு விழா முடிந்தவுடன் சுயேச்சை கவுன்சிலர்களை தி.மு.க. கடத்தியதாக அ.தி.மு.க.வினர் மறியல்


பதவியேற்பு விழா முடிந்தவுடன் சுயேச்சை கவுன்சிலர்களை தி.மு.க. கடத்தியதாக அ.தி.மு.க.வினர் மறியல்
x
தினத்தந்தி 6 Jan 2020 10:45 PM GMT (Updated: 6 Jan 2020 5:39 PM GMT)

கோவில்பட்டியில் பதவியேற்பு விழா முடிந்தவுடன் சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர்களை தி.மு.க.வினர் கடத்தியதாக கூறி, அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனில் உள்ள 19 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. வேட்பாளர்கள் தலா ஒரு வார்டிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

இதனால் கோவில்பட்டி யூனியனில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு தலைவர், துணைத்தலைவர் பதவியை பெறுவதில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா, கோவில்பட்டி யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலையில் நடந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. யூனியன் அலுவலக மெயின் கேட் பூட்டப்பட்டு, ஊழியர்கள் மற்றும் பதவியேற்க சென்ற ஒன்றிய கவுன்சிலர்களை மட்டுமே போலீசார் அனுமதித்தனர்.

இதையடுத்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 பேரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவரும், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 பேரும் என மொத்தம் 11 பேர் முதலில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்துக்கு சென்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு கூட்டுறவு துணை பதிவாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அவர்கள் 11 பேரும் யூனியன் அலுவலகத்தில் இருந்து ஒரு வேனில் புறப்பட்டனர்.

இதற்கிடையே, சுயேச்சை ஒன்றிய கவுன்சிலர்களை தி.மு.க.வினர் வேனில் கடத்தி செல்வதாக கூறி, யூனியன் அலுவலகம் அருகில் அந்த வேனின் முன்பு அமர்ந்து அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவில்பட்டி-எட்டயபுரம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதேசன் (கிழக்கு), பத்மாவதி (அனைத்து மகளிர்) மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அந்த வேனை போலீசார் அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 பேரும், தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவரும், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 பேரும் ஒன்றிய கவுன்சிலர்களாக பதவி ஏற்றனர்.

Next Story