உடன்குடியில் கடை பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
உடன்குடியில் கடையின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உடன்குடி,
உடன்குடி கொட்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 35). இவர் உடன்குடி பஸ் நிலையம் அருகில் கொடிக்கால் ரோடு பகுதியில் எலக்ட்ரிகல் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் தனது கடையை பூட்டிச் சென்றார்.
பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், கடையின் அருகில் இருந்த 8 கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கினர். பின்னர் அந்த கடை ஷட்டரின் பூட்டுகளை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். அங்கு மேஜையில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் வங்கி காசோலைகள், கடை பத்திரம், நில ஆவணங்கள் போன்றவற்றை திருடினர். மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைக்கும் கணினியின் ஹார்டு டிஸ்கையும் திருடிச் சென்றனர்.
நேற்று காலையில் தனது கடைக்கு சென்ற பிரசாந்த், அங்கு கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பணம், ஆவணங்கள் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்குப்பதிவு செய்து, கடையில் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
திருட்டு நடந்த கடையின் மாடியில் தனியார் வங்கி உள்ளது. ஆனால் அங்கு எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story