மஞ்சுவிரட்டில் மல்லுக்கட்ட தயாராகும் காளைகள்


மஞ்சுவிரட்டில் மல்லுக்கட்ட தயாராகும் காளைகள்
x
தினத்தந்தி 7 Jan 2020 3:30 AM IST (Updated: 6 Jan 2020 11:57 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு களத்தில் வீரர்களுடன் மல்லுக்கட்ட காளைகள் தயாராகி வருகின்றன.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் எப்போதும் வீரம் விளைந்த மாவட்டமாகவே திகழ்ந்து வருகிறது. மாவட்டத்தில் வீர விளையாட்டாக திகழ்ந்து வருவது மஞ்சுவிரட்டு. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்து இந்த வீர விளையாட்டை இப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர். பொதுவாக தமிழகத்தில் அலங்காநல்லூரில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

அதற்கு அடுத்தபடியாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறாவயல்புதூரில் நடைபெறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி என்பது மற்றொரு தனிச்சிறப்பாக விளங்கி வருகிறது. ஜல்லிக்கட்டு என்பது மதுரை போன்ற பெரிய மாநகரங்களில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களுக்கோ அல்லது வீரர்களிடம் பிடிபடாமல் போகும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த மஞ்சுவிரட்டு என்பது அதில் இருந்து வேறுபட்டதாகும். சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டு என்பது கிராமத்தில் உள்ள பெரிய திடலில் ஆங்காங்கே காளைகளை அதன் உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டு அதை அங்கு திரண்டு நிற்கும் இளைஞர்கள், மாடு பிடி வீரர்களை பிடிக்க செய்வது ஆகும். இதில் பரிசு ஏதும் கிடையாது. இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாடுகளை பிடிப்பதற்காக இளைஞர்கள் மாவட்டம் முழுவதும் இருந்து வந்து இதில் ஆர்வமாக கலந்துகொண்டு காளைகளை பிடிக்க போட்டி போடுவது தனிச்சிறப்பாகும்.

சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டானது சிறாவயல்புதூர், கண்டிப்பட்டி, அரளிப்பாறை, எஸ்.புதூர், கண்டரமாணிக்கம் ஆகியவை தனிச்சிறப்பு பெற்ற மஞ்சுவிரட்டு ஆகும். பொதுவாக இந்த மஞ்சுவிரட்டு என்பது தை மாதம் பிறந்த பின்னர் தங்களது நிலத்தில் அறுவடை செய்த பின்னர் அந்த நிலம் காலியானதாக இருக்கும். அந்த நிலத்தில் கிராம மக்களும் காளைகளும் விளையாடி மகிழவும், காளைகளின் கால்கள் நிலத்தில் படவும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிவகுத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்காக தற்போது திருப்பத்தூர், சிங்கம் புணரி, கல்லல், பாகனேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காளைகள் வைத்திருப்போர்கள் அதற்கு தற்போதே பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக இந்த போட்டியில் கலந்துகொள்ள உள்ள காளைகளுக்கு மண் குத்துதல், களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடுவதற்காக நீச்சல் பயிற்சி, கொம்பு சீவுதல் என பல்வேறு பயிற்சிகளை அளித்து தற்போது காளைகளை தயார் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து காளையை தயார் செய்யும் இப்பகுதி மக்கள் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் வீர விளையாட்டு என்பது களை கட்டும் விளையாட்டாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பிறந்த நாள் முதல் தொடர்ந்து 8 மாத காலம் வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த மஞ்சுவிரட்டு போன்ற வீர விளையாட்டுகளுக்கு போதிய அனுமதி கிடைக்காததால் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் பெரிதும் கவலையாக இருந்து வந்தனர். அதன் பின்னர் சட்ட போராட்டத்திற்கு பின்னர் தற்போது தொடர்ந்து இந்த வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் நடப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் இந்த பகுதியில் மஞ்சுவிரட்டு நடந்தால் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்பது எங்களின் நம்பிக்கை.

அதன்படி இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து வருகிறது. இதுவே எங்களின் நம்பிக்கைக்கு மற்றொரு சாட்சியாகும். இந்த வீர விளையாட்டுகளில் கலந்துகொள்வதற்காக எங்கள் வீட்டில் வளர்த்து வரும் இந்த காளைகளை நாங்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் போல் பாவித்து அதற்கு என்று நேரத்தை ஒதுக்கி தவிடு, பிண்ணாக்கு மற்றும் சிறப்பு வகை உணவுகளை கொடுப்பது வழக்கம். மேலும் தினந்தோறும் காளைகளை வயல்வெளிக்கு ஓட்டி சென்று அங்கு மண்ணை குத்த வைத்தல், நீர் நிலைகளில் நீச்சல் பயிற்சி அளிப்பது, கட்டி வைத்த நிலையில் இளைஞர்களை ஒன்று கூடி காளைகளை சீறி பாய வைத்தல், கொம்புகளை சீவி விடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறோம்.

இந்த பயிற்சிகளை தற்போது முதல் தொடங்கியதால் நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளைகள் களத்தில் நீண்ட நேரம் வீரர்களுடன் மல்லுக்கட்டி நின்று விளையாடும். எங்களது காளைகளை நின்று விளையாட வைப்பது மகிழ்ச்சியை தரும் வகையில் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். சிவகங்கை மாவட்டத்தில் புகழ்பெற்ற சிறாவயல்புதூர் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி மாட்டு பொங்கலுக்கு மறுநாள் வருகிற ஜனவரி 17-ந்தேதி நடைபெற உள்ளது. 

Next Story