திருச்செந்தூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: மீனவர் உடல் நசுங்கி பலி; நண்பர் படுகாயம் - பொதுமக்கள் சாலைமறியல்
திருச்செந்தூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மீனவர் உடல் நசுங்கி பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூரை அடுத்த ஆலந்தலை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சேவியர். இவருடைய மகன் இருதயராஜ் (வயது 22). அதே பகுதியைச் சேர்ந்தவர் எமர்சன் மகன் பிரைட்வின் (19). நண்பர்களான இவர்கள் 2 பேரும் மீனவர்கள்.
நேற்று மதியம் இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூருக்கு சென்று, மீன்பிடி வலை வாங்கினர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தங்களது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
திருச்செந்தூர்-குலசேகரன்பட்டினம் ரோடு இசக்கியம்மன் கோவில் அருகில் சென்றபோது, அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட இருதயராஜின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பிரைட்வின் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். விபத்து ஏற்படுத்திய லாரியை டிரைவர் நிறுத்தாமல் சென்று விட்டார். இதை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உடனே பிரைட்வின்னை சிகிச்சைக்காக திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்த இருதயராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஆலந்தலையிலும், விபத்து நிகழ்ந்த இடத்திலும் இருதயராஜின் உறவினர்கள், பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சுரேஷை பிடித்து விசாரித்து வருகின்றனர். குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதளம் அமைப்பதற்காக, லாரியில் பாறாங்கற்கள் லோடு ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது குறிப் பிடத்தக்கது.
Related Tags :
Next Story