`தினத்தந்தி' செய்தி எதிரொலி: கால்வாய் முன்பு கட்டப்பட்ட கட்டிடம் இடித்து அகற்றம்
‘தினத்தந்தி‘ செய்தி எதிரொலியாக, நகராட்சி அனுமதியின்றி கால்வாய்முன்பு கட்டப்பட்ட கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகரில் கடந்த நவம்பர் மாதம் கடைசியில் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக புதுக்கோட்டை நகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம் போன்ற அரசு அலுவலகங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. மேலும் புதுக்கோட்டை பெரியார்நகர் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் தான் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் பகுதியில் இருந்து காட்டுப்புதுக்குளத்திற்கு கால்வாயில் வரும் மழைநீர் குளத்தை நிரப்பிவிட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு உள்ள கால்வாயின் வழியாக பெரியார்நகரில் உள்ள வாய்க்காலில் சென்று, டி.வி.எஸ். கார்னர் பகுதியில் உள்ள சந்திரமதி வாய்க்காலில் கலந்து ஓட்டக்குளத்திற்கு செல்லும் வகையில் நீர்வழித்தடம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் காட்டுப்புதுக்குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாயும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு முன்பு உள்ள கால்வாயும் முறையாக தூர்வாரப்படவில்லை. மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு முன்பு உள்ள கால்வாய்க்கு புதிய பஸ் நிலையம், திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீரும் வந்து சேருகிறது. தற்போது புதுக்கோட்டையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு உள்ள கால்வாய் முன்பு நகராட்சியின் அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக தற்போது கடைகள் கட்டப்பட்டு வருகிறது. இதனால் பொக்லைன் எந்திரத்தை இறக்கி, கால்வாயை தூர்வார முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் தற்போது கூடுதலாக கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் வரும்காலங்களில் பெரியார்நகர் பகுதியில் பொதுமக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து `தினத்தந்தி’ நாளிதழில் கடந்த டிசம்பர் மாதம் 8-ந் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த செய்தியின் எதிரொலியாக கலெக்டர் உமா மகேஸ்வரியின் உத்தரவின்படி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் நேற்று நகராட்சியின் அனுமதியின்றி கால்வாயின் முன்பு கட்டப்பட்ட கடைகளின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கும், குறிப்பிட்ட நேரத்தில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி’ நாளிதழுக்கும் பெரியார் நகர், கம்பன் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் பெரியார்நகர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை தூர்வார வழிவகை செய்ய வேண்டும். இதேபோல வட்டார போக்குவரத்து அலுவலகம் பகுதியில் உள்ள கால்வாயையும் தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story