திருமணம் செய்வதாக கூறி விதவை பெண்ணிடம் ரூ.3.90 லட்சம் மோசடி செய்தவர் கைது
வெளிநாட்டில் இருப்பதாக தெரிவித்ததோடு திருமணம் செய்வதாக கூறி விதவை பெண்ணிடம் ரூ.3.90 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு,
பெங்களூருவில் வசித்து வருபவர் கவிதா (வயது 40, பெயர் மாற்றப்பட்டுள்ளது). விதவை பெண். இவர் திருமண இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்து 2-வது திருமணம் செய்ய வரன் தேடிவந்தார். இதை பார்த்த அர்மான் மாலிக் என்பவர் கவிதாவை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார். 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசினர்.
இந்த வேளையில் தான் இங்கிலாந்தில் பணியாற்றி வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் பெங்களூரு வந்து கவிதாவை திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அர்மான் மாலிக், கவிதாவை தொடர்பு கொண்டு தான் டெல்லி வந்துள்ளதாகவும், உனக்காக வாங்கி வந்த பரிசு பொருட்களுக்கு வரி கட்ட வேண்டி உள்ளதாகவும், அதனால் தான் கூறும் வங்கி கணக்கிற்கு ரூ.3.90 லட்சம் மாற்றும்படியும் கூறியுள்ளார். இதனை நம்பிய கவிதாவும் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.3.90 லட்சம் மாற்றினார். அதன்பிறகும் அர்மான் மாலிக், கவிதாவிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு கவிதா மறுத்தார். அதன்பிறகு அர்மான் மாலிக்கின் செல்போன் ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டது.
இதனால் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த கவிதா, இதுகுறித்து ஆடுகோடி போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூரு கோரமங்களாவில் இருந்துகொண்டு அர்மான் மாலிக் மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story